Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறனிழுக்கா தல்லவை நீக்கி

குறள் 384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா 
மானம் உடைய தரசு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
அறன் -  அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - ஒழுக்கம், தருமம், புண்ணியம்

இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்
இழுக்காது - தவறவிடாதல், கைவிடாதல்

அல்லவை - அறம் அல்லாதவை; பாவச் செயல்கள்; பயன் அல்லாத செயல்கள்; allavai   n. அல்¹. 1. Sin, evil;பாவம். அழுக்காற்றி னல்லவை செய்யார் (குறள், 164).2. Uselessness, fruitlessness; பயனின்மை. (பிங்.) 

நீக்கி - விலக்கல்
நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

மறன் - மறம் - வீரம்; கோபம்; பகை; வலிமை; வெற்றி; போர்; கொலைத்தொழில்; யமன்; கெடுதி; பாவம்; கலம்பகத்தின்ஓர்உறுப்பு; மறவர்குலம்; மயக்கம்.

இழுக்கா - குறையாமல்

மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல்.

உடையது - கொண்டது

அரசு - அரசன்; இராச்சியம் அரசியல், அரசாட்சி அரசமரம் திருநாவுக்கரசநாயனார்.

முழுப்பொருள்
ஒரு அரசு (அரசன்) என்றால் எப்படி இருக்க வேண்டும்? 1) தனக்கு விதிக்கப்பட்ட அறத்தில் இருந்து விலகாமல், தவறாமல் இருக்க வேண்டும். தன்னுடைய அறம் எனில் கடமை என்பது ஆகும். 2) தனது ஆட்சிக்குடியின் கீழ் அறம் அல்லாதவை  நடந்தால் அதனை முற்றிலும் விலக்கிட வேண்டும். 3) ஒரு அரசுக்கு எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வீரம் / வலிமை இன்றியமையாதது ஆகும். ஆதலால் எப்பொழுதும் தன்னுடைய நாட்டின் (படை)வீரம் குறையாமல் இருக்க செயல்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தன்னுடைய நாட்டின் (உணவு உற்பத்தி, பொருள், ஆயுதங்கள் மற்றும் பலவற்றில்) வலிமை குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவை மூன்றும் உடைய அரசு மானம் உடை அரசாகும். அதாவது பெருமை, வலிமை உடைய அரசாகும். அதுவே அரசாகும்.

எது அரசின் அறம்  என்பதற்கு முன்னரே திருவள்ளுவர் பதில் அளித்துள்ளார்

குறள் 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு

குறள் 382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

குறள் 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு

புறநானூற்று வரிகள் சொல்வது: “மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (55:9-10).

கம்பராமாயணப்பாடல் வீரம் சற்றும் குறையாத மானத்தை இவ்வாறு சொல்கிறது.
“மின்போன் மிளிர்வா ளொடு தோள் விழவும் 
தன்போர் தவிரா தவனைச் சலியா
என்போலி யர்போ ரெனினன் றிதுவோர் 
புன்போ ரென்நின் றயில்போ யினனால்” (கம்ப.படைத்தலைவர்.83)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் இழுக்காது - தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அல்லவை நீக்கி - அறனவல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து, மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன். 
(அவ்வறமாவது, ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா. 55) - என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது,
வீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான் 
ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான் 
மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான் 
ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159) எனவும் , அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான'.(பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை : அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.).

மணக்குடவர் உரை
அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.

மு.வரதராசனார் உரை
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

No comments:

Post a Comment