Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label காதற்சிறப்புரைத்தல். Show all posts
Showing posts with label காதற்சிறப்புரைத்தல். Show all posts

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்


குறள் 1130
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
உவந்து - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.
உறைவு - தங்குகை; சிறுகுகை; உறைதல்; இருப்பிடம்.
உறைவி - உறைபவள்
உறைவர் - இருக்கின்றார்

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உள்ளத்துள் - உள்ளத்தினில் - உள்ளத்தின் உள்ளே 

என்றும் - என்றைக்கும், எந்நாளும், எப்போதும்

இகந்து - இகத்தல் - தாண்டுதல்; கடத்தல் அடக்குதல்; கைப்பற்றுதல் பிரிதல் பொறுத்தல் போதல் நீங்குதல் புடைத்தல் காழ்த்தல் நெருங்குதல்

உறைவர் - இருக்கின்றார்; அன்பில்லா என் காதலர்

ஏதிலர் - அயலார்; பகைவர்; பரத்தையர்.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

இவ் - இந்த

ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.


முழுப்பொருள்
மகிழ்ந்து என்னை நீங்காது என் உள்ளத்துள்ளே என்றும் தங்கியிருக்கும் எனது காதலரை அயலார் என இகழ்கிறார் இவ்வூர் மக்கள். இவ்வூர் மக்களின் அறியாமையை உரைக்கிறாள் காதலி ஏனெனில் தாமகவே உவந்து தான் காதலன் காதலியின் மனதில் இருக்கிறானாம். வேறு எவ்வித வற்புறுத்ததினாலும் அல்ல.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நெஞ்சு களனாக நீயலென்” (குறுந்தொகை 36.3)

“........ நத்துறந்து
நெடுஞ்சேண் நாட்ட ராயினும்
நெஞ்சிற் கணியரோ தண்கடல் நாட்டே” (குறுந்தொகை 228.6)

“அவர் இருந்த என் நெஞ்சே” (குறுந்தொகை 340.7)

”பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத் தகல்வறி யானே” (நற் 388:9-10)

“நொதுமல் சுழுறும் இவ் வழுங்கல் ஊரே” (குறுந் 12:6)
“பொய்க்கும் இவ் வூரே” (ஐங்குறு.154:4)


பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். ('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்; அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா நின்றது இவ்வூர். தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலாரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று நெஞ்சின்மேல் வைத்துக் கூறியது.

மு.வரதராசனார் உரை
காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

சாலமன் பாப்பையா உரை
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே


குறள் 1129
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
இமைப்பின் - இமைத்தல் - இமைகொட்டுதல்; ஒளிவிடுதல் சுருங்குதல் தூங்குதல்

கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.

கரப்பாக்கு -  தெரியாமல் மறைந்துவிடுவார் (கண்ணில் இமைக்கும் நேரத்துக்கு)

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறிவல் - என்று நான் அறிவேன்

அனைத்தும் - எல்லாம்

அனைத்திற்கே - ஆனால் அதற்கே

ஏதிலர் - அயலார்; பகைவர்; பரத்தையர்; அன்பில்லா என் காதலர்

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்.

இவ் - இந்த

ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.

முழுப்பொருள்
காதலி கூறுகிறாள், என் காதலனை என் கண்களில் வைத்துள்ளேன். ஆனால் நான் கண் இமைத்தால் அவர் என் கண்களின் உள்ளே எங்காவது மறைந்துக்கொள்ளக்கூடும். அப்படி அவர் மறைந்துக்கொண்டால் என் காதலர் அன்பில்லாதவராக ஒரு அயலாராக இருக்கிறாரே என்று இவ்வூர் மக்கள் கூறுவர். அவருக்கு எதற்கு அவப்பெயர் உருவாக நான் ஏன் வாய்ப்பு அமைத்துத் தரவேண்டும்? ஆதலால்தான் நான் என் கண்களை இமைக்காமல் இருக்கிறேன். அதற்காக தூங்காமல் இருக்கிறேன் என்று கூறுகிறாள் காதலி. காதலனை கண்ணில் கட்டிவைக்க எப்படியெல்லாம் காதலின் சிறப்பை நயமான காரணமாக கூறுகிறாள் காதலி. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை


”நெஞ்சு களனாக நீயலென்” (குறுந்தொகை 36.3)

“........ நத்துறந்து
நெடுஞ்சேண் நாட்ட ராயினும்
நெஞ்சிற் கணியரோ தண்கடல் நாட்டே” (குறுந்தொகை 228.6)

“அவர் இருந்த என் நெஞ்சே” (குறுந்தொகை 340.7)

”பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத் தகல்வறி யானே” (நற் 388:9-10)

“நொதுமல் சுழுறும் இவ் வழுங்கல் ஊரே” (குறுந் 12:6)
“பொய்க்கும் இவ் வூரே” (ஐங்குறு.154:4)


பரிமேலழகர் உரை
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) இமைப்பிற் கரப்பார்க்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர். (தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். 'ஒரு பொழுதும்' பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை', என்பதாம்.).

மணக்குடவர் உரை
கண்ணிமைக்குமாயின் அவரொளிக்குமது யானறிவேன், அவ்வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்; அதற்காக இமைக்கிலன். இது கண் துயில்மறுத்தலென்னும் மெய்ப்பாடு.

மு.வரதராசனார் உரை
கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

சாலமன் பாப்பையா உரை
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்

 

குறள் 1126
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

கண்ணுள்ளின் - கண்ணுள் - கூத்துவகை; அரும்புத்தொழில்; கண்ணிற்குள்.

போகார்  - போகமாட்டார்; அதினின்றும் அகலாதவர்

இமைப்பின் - இமைத்தல் - இமைகொட்டுதல்; ஒளிவிடுதல் சுருங்குதல் தூங்குதல்

பருவரு-த்தல் - paruvaru-   5 v. intr. பருவா-. To be distressed in mind; மனம்வருந்துதல்.இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார் (குறள், 1127, மணக்.).

பருவரார் - அதனாலும் வருந்தி அலமுறாத

நுண்ணியான் - கூரியஅறிவுடையோன்; அமைச்சன்.

நுண்ணியர் - நுட்பமாக என்கண் நிறைந்தவர்

எம் - யாம்' என்பது பொருள் வேற்றுமைப்பட வரும் பொழுது திரியும் நிலை; எம்முடைய; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி.

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

காதலவர் - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக; என்னுடைய காதலர்

முழுப்பொருள்
காதலி தன் காதலனின் காதல்பற்றி இப்படி கூறுகிறாள். என் காதலன் என் கண்களின் உள்ளே இருக்கிறார். அதனைவிட்டு அவர் போகமாட்டார். அவரை என் கண்களில் அவரை வைத்திருக்கும் பொழுது கண்களை இமைத்தால் ஒரு கன நொடி அவரை சிறைப்படுத்துவதுப் போல் ஆயினும் அதற்காக அவர் மனம் வருந்தமாட்டார். ஏனெனில் எனது அச்செயல் காதலால் என்பதை உணரக்கூடிய நுண்ணிய அறிவுப்படைத்தவர் அவர். அத்தகைய காதலனை தனது காதலாக பெற்றதாக நயமாகவும் மெல்லிய கர்வத்துடனும் கூறுகிறாள் காதலி.

ஆங்கிலத்தில் possessiveness தமிழில் உடைமை என்பதின் ஒரு மெல்லிய வெளிப்பாடே இது. வீட்டில் கணவன் தன்னைவிட்டு எங்கும் செல்லக்கூடாது  என்று மனைவி நினைப்பாள். என்னடா இது எப்ப பார்த்தாலும் கூடவே இருக்கவேண்டும் என்கிறாளே, எனக்கு வேறு வேலை இல்லையா என்று நினைக்கும் கணவன்மார்களே அதிகம். அவர்கள் நிலைமையையும் புரிந்துக்கொள்ள முடிகிறது ஏனெனில் கணவன்மார்களுக்கு மற்றவேலைகளும் இருக்கிறது தானே. இக்குறளை நினைத்துக்கொண்டு மனைவியின் அன்பை புரிந்துக்கொள்ளலாம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.) (தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக,) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா நுண்ணியர். (இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.).

மணக்குடவர் உரை
என் கண்ணுள் நின்று நீங்கார்; இமைப்பேனாயின், இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார்: ஆதலான் எம்மாற் காதலிக்கப்பட்டார் நுண்ணியவறிவை யுடையார்.

மு.வரதராசனார் உரை
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

சாலமன் பாப்பையா உரை
என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்

குறள் 1125
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
உள்ளுவன் - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை )

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

யான் - தன்மையொருமைப்பெயர்

மறப்பின் - மறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு.

மறப்பு  - நினைவின்மை; மறுப்பு. maṟappu   n. மற-. [T. marap-pu.] See மறதி. மறப்பறியே னொள்ளமர்க் கண்ணாள்குணம் (குறள், 1125).

அறியேன் - அறியாதவன் ; நினைக்ககாதவன்

ஒள் -  adj. Good, excellent, நல்ல. 2. Beautiful, அழகுள்ள. 3. Bright, glitter ing, luminous, பிரகாசமான. 4. Knowing, அறிவுள்ள. 5. Abundant, மிகுதியான. The ள் of this word is changed into ட் and ண் before appropriate letters, whence the nouns ஒட்பம், and ஒண்மை. ஒள்ளழல்கண்ணிற்கால. His eyes emitting bright sparks of fire through rage

அமர்க் - (வி)பொருந்து; போராடு; மாறுபடு; விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்

கண்ணாள்  -  கலைமகள், நாமகள்; kaṇ-ṇ-āḷ   n. id. Belovedwoman; கண்ணாட்டி. (யாழ். அக.); kaṇṇāḷ   n. id. Sarasvatī,the goddess of learning; சரசுவதி (பிங்.)

குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிகஇராசததாமதமாகியமூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு.

முழுப்பொருள்
தலைவன் கூறுகிறான் - என்னுடன் போர் புரியும் அழகுள்ள கண்களை உடைய நான் விரும்பும் என் தலைவியை ஏன் என்னை உள்ளத்தால் நினைக்க சொல்கிறீர்கள் ? ஏனெனில் அவளை நான் மறந்தால் தானே நினைப்பதற்கு? அவளை மறக்காத நாளிலையே. பிரிந்து இருக்கும் பொழுதும் கண்களால் புரியும் ஊடல்/போர் என்னை அவளை மறக்காமல் இருக்க செய்கின்றன என்பதை தலைவன் கூறுவதாகவும் இக்குறள் கூறலாம். அதுவே காதலின் சிறப்பாகும். 

என்னை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்படத்தில் வரும்  மறுவார்த்தை பேசாதே பாடலில் "மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே " என்ற வரிகள் இக்குறளில் இருந்து வந்து இருக்கலாமோ? 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை:
(ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ? என்ற தோழிக்குச் சொல்லியது.) ஒள் அமர்க்கண்ணாள் குணம், யான் மறப்பின் உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன். (மன் : ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.).

மணக்குடவர் உரை:
மறந்தேனாயின் நினைப்பேன் யான்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை. தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.

மு.வரதராசனார் உரை:
போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே!.

சாலமன் பாப்பையா உரை:
ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

குறள் 1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
வாழ்தல் -  இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்

உயிர்க்கு - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

அன்னள் - அத்தன்மைவாய்ந்தவள்

ஆயிழை - தெரிந்தெடுத்தஅணிகலன்; கன்னியாராசி; அரிவாள்நுனி.

சாதல் - இறத்தல் -  cātal   n. சா-. Death; இறப்பு சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும்(சீவக. 269).

அதற்கு - அதற்கு

அன்னள் - அத்தன்மைவாய்ந்தவள்

நீங்கும் - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.

இடத்து - இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

முழுப்பொருள்
என் தலைவியுடன் நான் கூடியிருக்கும் பொழுது எல்லாம் நான்(தலைவன்/உடல்) உயிருடன்(தலைவி) இருக்கிறேன். அவளை விட்டு நீங்கும் பொழுது எல்லாம் உயிர் (தலைவி) பிரிந்த உடல்(தலைவன்) அதாவது பிணம் போல இருக்கிறேன். என் தலைவியே என் ஜீவன். இவ்வாறு காதலன் தன் காதலியின் அணுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகிறான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும், நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்; ('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும் அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.).

மணக்குடவர் உரை
கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்: நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள். இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

சாலமன் பாப்பையா உரை
என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்

குறள் 1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
கருமணியின் - கண்ணின்மணி; கருகுமணி, நீலமணி;கண்ணின் கருமணி

பாவாய் - பாவை - பொம்மைபோன்றஅழகியபெண்; பதுமை; அழகியஉருவம்; கருவிழி; பெண்; குரவமலர்; காண்க:பாவைக்கூத்து; நோன்புவகை; திருவெம்பாவை; திருப்பாவை; இஞ்சிக்கிழங்கு; மதில்.

நீ  - நீ  (தலைவி)

போதாய் - போய்விடு

யாம்  - நான் - தன்மைப்பன்மைப்பெயர்

வீழும் - வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

நுதற்கு  - நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

முழுப்பொருள்
காதலின் நேர்மையே அதன் சிறப்பு. காதலின் நேர்மை எப்படி இருக்கும் தெரியுமா? பதில் சொல்லுகிறார் திருவள்ளுவர். காதலன் காதலியை மனதார நேர்மையாக காதிலுக்கும் பொழுது, காதலன் எதிரே ஒரு பாவை வருகிறாள். அந்தப் பாவை அவன் முன்னே இருப்பதால் அவன் கண்களில் இடம் எடுத்துக்கொள்வதனால் அவளை அவன் முன்னே இருந்து போகச்சொல்கிறான். ஏனெனில் அவன் ஆசையாக விரும்பும் அழகியப் பெண்ணின் பொலிவான நெற்றியிற்கு /முகத்திற்கு இடம் இல்லாமல் போய்விடுகிறதாம். அதாவது அவன் கண்களில் அவன் காதலியின் பொலிவான நெற்றியை கொண்ட முகத்திற்கு மட்டுமே இடம். வேறு யாருக்கும் இடம் இல்லை. அதாவது அவன் பிறரை ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டானாம்.

அதுமட்டுமில்லை. தலைவி கண்முன்னே இல்லையென்றாலும் அவள் கண்முன்னே எப்பொழுதும் இருப்பதுப்போன்ற கற்பனையில் இருக்கிறான். அதுமட்டும் இன்றி இந்த கண்கள் தலைவிக்கு மட்டும் தான் சொந்தம். வேறுயாருடைய நிழல் கூட அதன் உள்ளே வருவதற்கு (அனுமதியில்லையாம் / ) இடமில்லையாம்.

பின்னாளில் பாரதியாரோ, “என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ” என்று கண்ணனைக் காதலியாக பாவித்து, அவனே கண்ணின் பாவையெனவும் கூறியதற்கு முன்னோடிக் கற்பனை வள்ளுவன் செய்தது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“மணிவாழ் பாவை நடைகற் றன்ன’ (நற் 184:7)
“பாவை மாய்த்த பனிநீர்” (அகநா 5:21)
“கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்” (அப்பர்.ஆவடுதுறை 1)

பரிமேலழகர் உரை
(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம். ('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.).

மணக்குடவர் உரை
என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது.

மு.வரதராசனார் உரை
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!.

சாலமன் பாப்பையா உரை
என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

குறள் 1122
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
உடம்பு உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி.

உடம்பொடு - உடம்புடன் ;உடலுடன்

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு.

உயிரிடை - உயிர் இடத்தில

என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.

மடந்தை - பெண்; பதினான்குமுதல்பத்தொன்பதுவயதுவரையுள்ளபெண்; பருவமாகாதபெண்; சேம்புவகை.

மடந்தையொடு - அந்த பெண்ணுடன்; என் காதலியுடன்

எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

எம்மிடை - என்னுடைய

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
இந்த உடம்புக்கு உயிருடன் என்ன உறவோ நெருக்கமோ எத்தன்மையோ அத்தன்மையானது என் காதலிக்கும் எனக்கும் உள்ள உறவு, காதல்.

உடம்பும் உயிரும் இரண்டற கலந்தது. உயிர் இல்லை என்றால் அதனை சடலம் என்று சொல்லுவோம். ஆதலால் காதலி இல்லை என்றால் இவன் சடலத்துக்கு ஒப்பானவன் என்று பொருள். உதாரணமாக பல இல்லங்களில் வயதடைந்த பல கணவன் மனைவி மார்களில் ஒருவர் உயிரிழந்த பின் மற்றொருவர் அந்த துக்கத்தை தாள முடியாமல் சிறிது காலத்திலேயே இறந்து விடுவார் அல்லது அவர்களது செயல்பாடுகள் குறைந்துவிடும் காலப்போக்கில் இறந்தும் விடுவார். அது வயதினால் மட்டும் அல்ல மனதளவில் ஒருவரோடு ஒருவர் சார்ந்து இருப்பார்கள்.


மேலும், உடம்பொடு உயிர் இருப்பது இயற்கையானது, இயல்பானதும் கூட. காதலும் அதுப் போன்றதே. இயற்கையானது.  அந்தக் கோணத்தில் பார்த்தால் எனக்கு கீழ்க்காணும் வரிகள் நினைவுக்கு வருகின்றன

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் குறிப்பாக (main-ஆக) அவரது துணைவியார் கணவதி அம்மாள் பற்றி கி.ரா.இணைநலம் (எஸ்.பி.சாந்தி எழுதியது) நூலில் இருந்து சில பகுதிகள்
கி.ரா அய்யா ஒரு முறை டெல்லி சென்றபோடு, தாஜ்மகால் போயே ஆகணும் என்றார்களாம் கூட வந்தவர்கள். சரின்னு போனோம். எனக்கு எதுவும் வியப்பா இல்லை. இவ்வளவு பெரிய சமாதி. முழுக்க சலவைக் கல்லால் கட்டியது. முன்புறம் தேக்கியுள்ள நீரில் விழும் அதன் எழில் தோற்றம். ஜன்னால் அமைப்புகள், வேலைப்பாடுகள் இப்படி.... இதெல்லாம் நமக்கு புதுசு. இதை நிறைய T.V.யில் பார்த்திருக்கோம் என்கிறார்.

காதலின் அடையாளம் இல்லையா என்கிறேன்(--எஸ்.பி.சாந்தி). மும்தாஜ் தன்னோட பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுக்கையில் இறந்து போனாள். எத்தனையோ துயரங்கள். காதல் ரொம்ப இயல்பானதும்மா. குறிப்பிட்ட வயதில், குறிப்பாக தன் வாலிப பருவத்தில் மனிதர்கள் ரொம்ப வீரமாக செயல்படுவார்கள். அதை யாரும் நான் என் வாழ்நாளில், அந்த காலங்களில் வீர வயப்பட்டேன் என்று சொல்வதில்லை. ஆனால் காதல் வயப்பட்டஹை மட்டும் இப்படீ... பெரீசா.. பேசிக்கிட்டே இருக்கோம். எத்தனை திரைப்படம், பாடல்கள் என அய்யா குறிப்பிடுகையில் அதில் உண்மை இருப்பதாகவே பட்டது. காதல் என்பது சலவைக் கல் கட்டிடம் அல்ல. கல்வெட்டு அல்ல. இவையெல்லாம் வெளிப்பாட்டின அடையாளம். ஆனால் எந்த அடையாளமும் இல்லாமல் நீர் மாதிரி தன் வழித்தடமெங்கும் ஈரப்படுத்திக்கொண்டு, புல் முளைக்கச் செய்யும் காதலும் உள்ளது. நிச்சயம் காதல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வருவது அல்ல, என்பது அய்யாவையும், அம்மாவையும் ஒரு சேர பார்க்கையில் தோன்றுகிறது. 


ஒப்புமை


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பிரிவு அச்சம் கூறியது.) உடம்பொடு உயிரிடை என்ன அன்ன - உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய? அத்தன்மைய; மடந்தையொடு எம்மிடை நட்பு - இம்மடந்தையோடு எம்மிடை உளவாய நட்புக்கள். ('என்ன'? எனப் பன்மையாற் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்பதுன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி. தெய்வப் புணர்ச்சியாகலான், அதுபொழுது உணர்ச்சியிலள் ஆகியாள் பின் உடையளாமன்றே?ஆயவழி 'இவன் யாவன் கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல்'? எனவும், 'இன்னும்இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்'? எனவும் அவள்மனத்தின்கண் நிகழும், அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து, அவை தீரக் கூறியவாறு. 'என்னை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
உடம்போடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன்மைத்து, மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு. நின்னிற் பிரியமாட்டே னென்றவாறு. இது தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது.

மு.வரதராசனார் உரை
இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

சாலமன் பாப்பையா உரை
என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

குறள் 1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி 
வாலெயிறு ஊறிய நீர்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
பால் - குழவி, குட்டி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான நீர்மப்பொருள்; பிணத்தை அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற் பாலும் நவதானியமும் சேர்த்துத் தெளிக்கும் சடங்கு; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மை முதலியவற்றிலிருந்து கசியும் சீழ்; பிரித்துக்கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமைபன்மை என்ற இருவகைப் பாகுபாடு; அகத்திணை புறத்திணை என்ற பாகுபாடு; இடையர் குறும்பர்களின் வகை.

பாலொடு - பாலுடன்

தேன் - மது; தேனிறால்; கள்; இரசம்; இனிமை; வண்டுவகை; பெண்வண்டு; மணம்.

கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல்

கலந்தற்றே - கலத்தலைப் போன்றது

பணி - செயல்; தொழில்; தொண்டு; பணிகை; பரக்கை; பயன்தரும்வேலை; நுகர்பொருள்; அணிகலன்; மலர்களால்அலங்கரிக்கை; பட்டாடை; தோற்கருவி; வேலைப்பாடு; வகுப்பு; சொல்; கட்டளை; விதி; வில்வித்தைமுதலியவற்றைக்கற்பிக்குந்தொழில்; ஈகை; நாகம்; தாழ்ச்சி.

மொழி - சொல்; கட்டுரை; சொற்றொகுதி; பேச்சுமுறை; வாக்குமூலம்; பொருள்; மணிக்கட்டு, முழங்கால், கணுக்கால்முதலியவற்றின்பொருத்து; மரக்கணு.

பணிமொழி - paṇi-moḻi   n. பணி¹- +.1. See பணிபதம் 2. Low, gentle speech, as ofa woman; மென்மொழி. பணிமொழியரிவை (பு. வெ
பணிமொழி - paṇi-moḻi   n. பணி&sup4;- +.Word of command; கட்டளை படையுள் படுவோன் பணிமொழி கூற (சிலப். 8, 13).
பணிமொழி - தாழ்ந்தசொல்; மென்மொழி; பெண்; கட்டளை.

வால் - இளமை; தூய்மை; வெண்மை; நன்மை; பெருமை; மிகுதி; விலங்குகளின்பின்புறத்தில்நீண்டுதொங்கும்உறுப்பு; நீளமானது; குறும்புசெய்பவர்; குறும்பு; காண்க:வாலுளுவை.

எயிறு - பல்; பல்லின்விளிம்பு; யானைக்கோடு; பன்றிக்கொம்பு; கணு.

ஊறிய - ஊறுதல் - ūṟu-   5. v. intr. [T. ūru, K. M.ūṟu.] 1. To spring, flow, as water in a well;to issue; நீரூறுதல். (குறள், 396.) 2. To ooze,percolate; கசிதல் (W.) 3. To soak; to besteeped, pickled; ஊறுகாய்ப் பதமாதல். 4. Togather, as milk in the breast, as toddy in palmflowers; பால் முதலியன சுரத்தல் 5. To run; tospread, as ink on flimsy paper; to keep, asmoisture around a spring or in a river bank;  

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

ஊறிய  நீர் - உமிழ் நீர் - 

முழுப்பொருள்
பால் ஒரு பசுமாட்டின் (அல்லது எருமை மாட்டின்) காம்பில் இருந்து எடுக்கப்பட்டது. தேன் என்பது பல நூறு மெல்லிய மலர்களில் இருந்து சேகரிக்கபட்டது. பாலின் சுவையை நாம் அறிவோம். தேனின் சுவையை நாம் அறிவோம். ஆனால் பாலும் தேனும் கலந்தால் அதனின் சுவையே வேறு. அது மிக இனிமையான தித்திக்கும் சுவை. பருக பருக வேண்டும் என்று நா சொல்லும் சுவை.

அதுப்போல மிக மென்மையான என் காதலியின் வெண்மையான பற்களின் இடையே உள்ள உமிழ்நீர் பாலோடு சேர்ந்த தேன் போன்ற சுவை உடையதாம். தன்னுடைய உமிழ்நீரை தேன் சுவை என்று காதலி சொல்ல முடியும். தன்னுடைய பால் சுவை என்று காதலன் சொல்ல முடியும். பாலோடு தேன் கலந்த சுவை என்று காதலன் (அல்லது காதலி) சொல்கிறான் என்றால் அவர்கள் இருவரின் உமிழ்நீரும் கலந்ததனால் -அதனை சுவைத்ததனால் தான் சொல்ல முடியும். இரு உமிழ்நீரும் காதலனும் காதலியும் இதழோடு இதழ் முத்தம் கொடுக்கும் பொழுதுதான் கலக்கும். ஆக காதலனும் காதலியும் புணர்ச்சியின்பத்தை மகிழும் பொழுது கண்டுக்கொள்ளும் சிறப்பை இங்கு நாம் காண்கிறோம். இச்சுவை வேண்டும் வேண்டும் என்று நா சொல்லுவதுப் போல இம்முத்தம் வேண்டும் வேண்டும் என்று தங்கள் அகம் சொல்லுகிறது என்பதையும் நாம் இங்கு ஊகித்துக்கொள்ளலாம்.

மனித உடலில் உமிழ்நீர் சுரந்துக்கொண்டேஇருக்கும். அது தீடீர் என்று காதலியை பார்த்ததனால் சுரக்காது. ஆனால் பிறந்ததில் இருந்து இத்தனை ஆண்டுகளாக எல்லாம் தலைவனுக்கு உமிழ்நீர் சுவைக்கவில்லை. காதலியுடன் முத்தம் கொடுக்கும் பொழுது மட்டும் சுவைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் உண்மையில் இருவரின் உமிழ்நீரும் கலக்கும் பொழுது அதற்கென்று ஒரு இனிமையான சுவை சேராது. ஆனால் காதலின் மிகுதியால் தலைவனும் தலைவியும் அந்த கலந்த உமிழ்நீரை பாலோடு கலந்த தேன் போன்ற சுவை என்கிறார்கள். அதுமட்டும் இன்றி பாலும் தேனும் சேர்ந்தால் அதனை பிரிக்க முடியாது. அதுப்போல இக்காதலனும் காதலியும் சேர்ந்துவிட்டார்கள். இவர்கள பிரியமாட்டார்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள்.

இக்குறள் காதலின் மிகுதியால் நாம் அறியவதை கூறி காதலின் சிறப்பை எடுத்து உரைக்கிறது. 

ஒப்புமை

பாலொடு தேன் கலத்தல்:
“பிரசங் கலந்த வொண்சுவைத் தீம்பால்”
“தேனொடு தீம்பால்” (நற். 110:1, 179:5-6)

“தேன்மயங்கு பாலினும்”
“தேன்பெய்து, அளவுறு தீம்பால்”
“தேன்கலந் தளைஇய தீம்பால்”  (அகநா. 89:19-20, 207:14)

“பால்மடுத்துத் தீந்தேன் பருகுவாள்”
“தேனிற் பாலென” (சீவக. 1044, 1761)

“தேனும் பாலும் கலந்தன்னவர்” (பெரிய திருமொழி. 5. 4:8)

வாலெயிறூறிய நீர்:
“வாலெயி றூறிய வசையில் தீநீர்” (குறுந். 267:4)
”வாலெயி றூறிய நீரே” (அகநா. 237:17)

சீவகசிந்தாமணிப் (1915) பாடலொன்று, இக்கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது.

“பானிலத் துறையும் தீந்தேன் அனையவாய் அமிர்தம் ஊற
மானலங் கொண்ட நோக்கி மகன்மன மகிழச் சொன்னாள்”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகன் தன் காதல் மிகுதி கூறலும் , தலைமகள் தன் காதல் மிகுதி கூறலும் ஆம் . இது , புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தல் , நலம் புனைந்து உரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது.]

(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும். ('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன் சுவை போலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறு வேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.).

மணக்குடவர் உரை
பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர். இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது.

மு.வரதராசனார் உரை
மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை
என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!.

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

குறள் 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
நெஞ்சத்தார் - நெஞ்சத்தில், மனதில் உள்ளவர்
காதல் அவராக - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக
வெய்து - வெம்-மை, வெப்பமுடையது; வெப்பம்; துயரம்; வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம்.
உண்டல் -  உண்டாகுகை, உண்டல்; அழித்தல்; சிரித்தல்.
அஞ்சு - ஐந்து; அச்சம்; ஒளி.
அஞ்சுதும் - அச்சம் கொள்கிறது
வே - s. Spying, reconnoitering, espio nage, வேவு. (சது.),
-- (வேக,வெந்து) vee (veeka, ventu) வே (வேக,வெந்து) be cooked (in narrowest sense, in water and without seasoning), parcook; be hot
-- எரிதல்,  வெப்பமாதல், துன்பமுறுதல், சினமுறுதல்

பாக்கு - அடைக்காய்; கமுகு; எதிர்காலங்காட்டும் வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி;

அறிந்து - தெரிந்ததனால், உணர்ந்ததனால்.

முழுப்பொருள்
மனதிற்கு இனியவர் காதலர் ஒரு பெண்ணின் மனதில் நிறைகிறார். அப்படிபட்டவர் பெண்ணின் மனதில் குடிகொள்வதனால் அவள் உணவு உண்ணும் பொழுது மிகுந்த கவனம் கொள்கிறாள். ஏன் என்றால் சூடான உணவோ அல்லது காரமான உணவோ உண்டால் அவை மனதிற்கு துன்பம் தரும் (யோசித்துப் பாருங்கள், நெஞ்செரிச்சல் வந்தால் தகாத உணவை உண்டு இருப்போம் என்கிறோம்). ஆகவே காதலருக்கும் துன்பம் வருமாம்.

ஆகவே சூடான உணவையோ காரமான உணவையோ உண்டால் கனவருக்கு துன்பம் வரும் என்று முன்னறே தெரிந்ததனால் அவள் அத்தகைய உணவை அஞ்சுகிறாளாம் தவிர்க்கிறாளாம்.

கேட்க பேதமையாய் இருந்தாலும் அதுவே காதலின் சிறப்பு! பேதமை இல்லா காதல் எங்கே!

ஒப்புமை
”நெஞ்சு களனாக நீயலென்” (குறுந்தொகை 36.3)

“........ நத்துறந்து
நெடுஞ்சேண் நாட்ட ராயினும்
நெஞ்சிற் கணியரோ தண்கடல் நாட்டே” (குறுந்தொகை 228.6)

“அவர் இருந்த என் நெஞ்சே” (குறுந்தொகை 340.7)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை 
(இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து. ('எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார்: ஆதலானே வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து. இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காதலவர் நெஞ்சத்தாராக - எம் காதலர் எப்போதும் எம் நெஞ்சினுள் ளிருக்கின்றாராதலால் ; வேபாக்கு அறிந்து - அவர் சூடுறுதலை யறிந்து ; வெய்துஉண்டல் அஞ்சுதும் - வெம்மையாக வுண்ணுவதற்கு அஞ்சுகின்றேம்

எப்போதும் எம்நெஞ்சிலிருக்கின்றவரைப் பிரிந்தாரென்று கருது வதென்னை என்பது குறிப்பெச்சம் , ' வேபாக்கு ' தொழிற்பெயர் ; 'பாக்கு ' தொழிற்பெயரீறு .
மு.வ உரை
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.

சாலமன் பாப்பையா உரை
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கம்பன் அவன் குறள் கற்று கரைந்ததைத்தான்
காட்டி நின்றேன் கம்பனது பாடல் தன்னில்
நம்பி யவன் கொண்ட குறள் இங்கே சொல்வேன்
நானிலத்தீர் தமிழ் கொணடே மகிழ்ந்திடுவீர்
செம்பு நிறப் பெண்ணொருத்தி வீட்டில் என்றும்
சீராகச் சூடாக எதையும் உண்பாள்
அம்பு விழிப் பெண்ணவளின் உள்ளே ஒரு
ஆணழகன் நுழைந்தானாம் குடி கொண்டானாம்

வம்பு வந்து சேர்ந்ததவள் வீட்டிற்குள்ளே அன்னை
வடிவழகுப் பெண்ணவட்கு அன்பு சேர்த்து
செம்பு நிறைப் பசும்பாலைக் காய்ச்சி அவள்
சீர் அறிந்து சூடாகக் கொண்டு தந்தாள்
கொம்பு முலைப் பெண்ணாளோ அருந்தவில்லை
கொண்டு தந்த தாயார்க்குப் புரியவில்லை
அன்பு கொண்டு உள்ளிருக்கும் காதலனோ
அச்சூட்டைத் தாங்கானென்றருந்தவில்லை

இதயத்தில் குடியிருப்பவனே ...!!!  (நன்றி கவிப்புயல் இனியவன்)
என் நெஞ்சுக்குள்ளே
குடியிருக்கும் என்னவனே
இதயமே உனக்கு கோயில்
நீயே என் இதய தெய்வம் ...!!!

என் இதய தெய்வமே
இதயத்தில் குடி கொண்டு
வாழ்பவனே - உனக்கு
சுட்டு விட கூடாது என்பதால்
சூடான உண்பதையே
தவிர்த்து விட்டேன்
என்னவனே ....!!!

கண்உள்ளார் காத லவராக

குறள் 1127
கண்உள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து"
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உள்ளார் -உடையவர்

காதலவராககாதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.

ஆக - ஆகுதல் - ஆவது என்பது; ஆதல்

கண்ணும் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

எழுதுதல் - எழுத்துவரைதல்; ஓவியம்வரைதல்; இயற்றுதல்; விதியேற்படுத்துதல்; பாவைமுதலியனஆக்குதல்; அழுந்தப்பதித்தல்; பூசுதல்.

எழுதேம் - (மை) எழுத மாட்டேன்

கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.

கரப்பாக்கு -  தெரியாமல் மறைந்துவிடுவார் (கண்ணில் இமைக்கும் நேரத்துக்கு)

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

முழுப்பொருள்
என் காதலர் என் கண்களுக்கு உள்ளே குடி உள்ளதால், நான் என் கண்களுக்கு மை அணிவது இல்லை. மை போடும் பொழுது கண் இமைகளை மூட வேண்டி வருமே. அக்கணம் என் காதலர் மறைந்து விடுவாரே! 

இடைவிடாது காணப்படுகின்றவரைப் பிரிந்தாரென்று கருதுவது எங்ஙனந் தகும் என்பதாம்!

ஒப்புமை
”கண்ணுள்ளார் நுங்காதலர் ஒழிக்காமல் ஈங்கென
உண்ணிலாய வேட்கையால் ஊடினாரை” (சீவக.72)

“சிறுவா ளுகிருற் றுறாமுன்னும் சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி எழுதின் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவது அஞ்சனம் அம்பல வர்ப் பணியார்
குறிவாழ் நெறிசெல்வர் அன்பர்என் றம்ம கொடியவளே” (திருச்சிற் 334)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து. (இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
எங்காதலவர் கண்ணுள்ளார்: ஆதலானே கண்ணும் மையெழுதேம்: அவர் ஒளித்தலை யறிந்து. எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று.

மு.வரதராசனார் உரை
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!.

சாலமன் பாப்பையா உரை
என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.