Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_080. Show all posts
Showing posts with label Athikaaram_080. Show all posts

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்

 

குறள் 800
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
மருவுக - மருவுதல் - கலந்திருத்தல்; வழக்கப்படுதல்; தோன்றுதல்; கிட்டுதல்; தழூவுதல்; பயிலுதல்; புணர்தல்; தியானித்தல்; பதித்தல்

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அற்றார் - இல்லாதவர்; பொருள்இல்லாதவர்; முனிவர்; 

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. 

ஈத்தும் - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

ஒருவு - ஆடு; நீங்குகை.

ஒருவு-தல் - oruvu-   5 v. tr. 1. Toabandon, renounce; விடுதல் ஒருவுக வொப்பிலார் நட்பு (குறள், 800). 2. To cross, passover; கடத்தல் இருவினை வேலை யொருவினைநீ (திருநூற். 67). 3. To resemble, equal; ஒத்தல் (பரிபா. 3, 32, பி-ம்.) 4. To escape; தப்புதல் பருந்தினேறு குறித்தொரீஇ (புறநா. 43, 5).--intr. To beexcepted; ஒழிதல் வேந்தனி னொரீஇய வேனோர்(தொல். பொ 32).  

ஒருவுக - நீங்குக, விலக்குக

ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

இலார் - இல்லை, இல்லாதவர் 

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
மாசற்றவர்களோடு குற்றங்களற்றவர்களோடு தீமையற்றவர்களோடு எக்காலமும் நம்மிடம் மாறுப்பாடற்ற குணம் கொண்டோரோடு நட்பாய் கலந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். அத்தகைய நண்பர்களுடன் இருந்தால் வாழ்வில் நாம் சென்று அடையக்கூடிய சிகரங்கள் ஏராளம். ஆராய்ந்து அவர்களை நட்பாய் கொள்க.

ஆனால் நம்முடன் மனதாலும் குணத்தாலும் தகுதியாலும் தன்மையாலும் எண்ணங்களாலும் செயல்களாலும் பொருந்தாத நண்பர்களை ஏதாவது (காசு) கொடுத்தாவது விட்டு விலகுக என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஏனெனில் அத்தகைய தீ நட்புகள் உடன் இருந்தால் நாம் வாழ்வில் இழப்பவை மிக மிக அதிகம். நேரம் விரயமாகும். ஊக்கம் குறையும். ஆக்க சக்தி குறையும். குறிக்கோள்கள் சிறிதாகும். கவன சிதறல்கள் அதிகரிக்கும். நம்பகத்தன்மையில்லா உறவுத் துன்பகாலத்தில் கைவிடும். மனம் நோகும். இப்படி பல இழப்புகள் உண்டு. இவற்றையெல்லாம் விட சிறிது விலைகொடுத்தாவது நமது இழப்பை வெகுவாக குறைத்துக்கொள்ளலாம். நமது ஆக்கசக்தியை வேறு திசைகளில் குறிக்கோள்களில் செலுத்தலாம்.

இக்குறளின் கருத்தையொட்டிய குறளினை அறத்துப்பாலின் செய்நன்றி அதிகாரத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.


இவ்வதிகாரத்தின் நான்காவது குறளில் ஏதேனும் கொடுத்தாவது நல்ல நட்பைக் கொள்ளவேண்டுமென்றார். இக்குறளில் ஏதேனும் கொடுத்தாவது தீயவர் நட்பை விடவேண்டும் என்கிறார். எல்லாவற்றுக்கும் ஒரு விலையைக் கொடுக்கும் பழக்கம் வள்ளுவர் காலத்திலேயே இருந்திருக்கிறது போலும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக. (உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
குற்றமற்றாரது நட்பைக் கொள்க; ஒரு பொருளைக் கொடுத்தாயினும் தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக.

மு.வரதராசனார் உரை
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

 

குறள் 799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
கெடும் - கெடுதல் -  அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

காலைக் - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை

கைவிடுவார் - கைவிடுதல் - கைவிடு-தல் - kai-viṭu-   v. tr. id. +. [T.kaiviḍu, M. kaiviṭu.] To forsake, abandon,desert, as dependents; to shun, eschew, as passions; விட்டொழிதல். பெரியோர் கண்டு கைவிட்டமயல் (நாலடி, 43).  

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

அடும் - அடு-தல் - aṭu-   6 v. tr. [K. aḍu, M. aṭuka.]1. To cook, dress, as food, roast, fry; சமைத்தல் அமுதமடு மடைப்பள்ளி (கல்லா. 13). 2. To boil;காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4). 3. To melt; உருக்குதல் அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக. 98). 4. To pound, as rice;குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா. 227). 5. Toconquer, subdue, as the senses, paṣsions;வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக. 1468).6. To trouble, afflict; வருத்துதல் கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு. சூரனமை. 59). 7. Todestroy, consume; அழித்தல் எல்லாப் புவனமும். . . அடுபவர் (கந்தபு. ஏமகூ. 18). 8. To kill;கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா. 36).  

காலை - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை

உள்ளினும் - உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

சுடும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

முழுப்பொருள்
துரோகங்களை நமது சாவிலும் மறக்க முடியாது என்று கூறுகிறார் திருவள்ளுவர். நமக்கு ஒரு கேடு / துன்பம் வரும் பொழுது நம்மை கைவிடுகின்றவரின் உறவை நட்பை ஒருபொழுதும் கொள்ளவேண்டாம். ஏனெனில் அத்தகைய துரோகிகளை சாவில் (அழிவில், இறக்கும் தருவாயில்) நினைத்தாலும் நமது உள்ளம் நம்மை சுடும். ஏனெனில் போயும் போயும் இத்தகைய நட்பை வைத்துக்கொண்டு இருந்தாயே என்றும் அவர் கைவிட்டுவிட்டு சென்றதையும் நினைத்து வருந்தும். மேலும், சாவு என்பது ஒருவர் கனிவாகும் தருணமும் கூட. அது பிறரை எளிதாக மன்னிக்கும் வாய்ப்புள்ள தருணமும் கூட. ஆனால் அத்தகைய நிலையிலும் ஆராயாஅமல் கொண்ட அந்த தவறான நட்பை நினைத்து வருந்துவார் என்றால் அந்நட்பு எவ்வளவு தவறான ஒன்றாக இருக்கும். ஆதலால் ஆராய்ந்து நட்பினைக் கொள்ளவேண்டுமென்பதை வலியுறுத்துகிற குறள்.

இத்தகையோரைப்பற்றியும் கூறும்விதமாக, நாலடியார் பாடலொன்று:

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் – ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.

குளிர்ந்த மலைகளையுடைய நாடனே!, சாய்கால் உண்டான காலத்தில் மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப்போல நெருங்கிய உறவினர் பலராவர். ஒவ்வாத வறுமையை ஒருவர் அடைவராயின், அக்காலத்தில், நட்புடையேம் என்று உரிமை பாராட்டுவோர் சிலராவர்.

இன்னா நாற்பது பாடல் வரி இதை ஒரு வரியில் சொல்கிறது. “இன்னா,கெடும் இடம் கைவிடுவார் நட்பு”.


”உள்ளின் உள்ளம் வேமே” (நற் 184:6)
”உள்ளின் உள்ளம் வேமே” (குறுந்.102:1)
“உள்ளின் உண்ணோய் மல்கும்”  (குறுந்.150:4)
“கருதின்வேம் உள்ளமும்” (கம்ப.தாடமை.5)
“நினையும் நெஞ்சமும் சுடுவது” (கம்ப.வனம்புகு.38)

“இடர்ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட
தொடர்புடையேம் என்பார் சிலர்” (நாலடி.113)

“மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியா தார்” (ஐந்திணையைம்பது.48)

“கெட்ட காலை விட்டன ரென்னாது
நட்டோர் என்பது நாட்டினை” (பெருங் 2.9:118-9) 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும். (நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடிதாம் எனக் கைவீடு எண்ணிச்செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்'. என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கெடும்பொழுது கைவிடுவாரது நட்பைத் தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்: அவர் கொல்லுமதனினும். இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது.

மு.வரதராசனார் உரை
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

 

குறள் 798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உள்ளற்க - நினைக்காதீர்

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

சிறு - ciṟu  
(an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு be comes சிற்று.

சிறுகுவ -சிறு - ciṟu   - க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. As சிறுகு, used in all its meanings. 2. To show anger, சினக்க. (c.) 3. v. a. To make small, to decrease, குறைக்க. கடுகு சிறுத்தாலுங் காரம் போகுமா? Will the mustard lose its pungency when made smaller, i. e. good men even under ad versity will retain their confidence.

கொள்ளற்க - கொள்ளாதீர் 

அல்லல் - துன்பம்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்

ஆற்று - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அறுப்பார்  - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

ஆற்று அறுப்பார் – எதிர்கொள்ளும், நீக்கும் வழிகளைச் சொல்லாது, கைவிடுகின்றவர்

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை

முழுப்பொருள்
நாம் ஒரு பெரும் செயலை செய்யும் பொழுது அல்லது வாழ்வில் ஊக்கத்தோடு உற்சாகத்தோடு செல்லும் பொழுது அந்த ஊக்கத்தை/உற்சாகத்தை குறைக்கின்ற (அல்லது சிறுமை செய்கின்ற) செயல்களை எண்ணங்களை நினைக்கக்கூடாது. ஏனெனில் அது பெரும் செயலை ஆற்ற தடையாக அமையும். 

அதுப்போல நமக்கு ஒரு துன்பம் வந்தால் உடன் இருந்து உதவாமல் நம்மைவிட்டு விலக காரணங்களைத் தேடி விலகும் நண்பரை/உறவை கொள்ளாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். அத்தகைய நண்பர்கள் நம்மை தேக்கி வைக்கவே செய்வார்கள். 

ஏன் ஊக்கத்தையும் நட்பையும் தொடர்பு படுத்துகிறார் திருவள்ளுவர்?
ஊக்கம் பெரிய செயல்களை செய்யவும் வாழ்வை வாழவும் அவசியமான ஒன்று. அதுப்போல் நல்ல நண்பர்களும் பெரும் செயல்களை செய்யவும் வாழ்வை வாழவும் அவசியமான ஒன்று. ஊக்கம் ஒன்றே நம்மை வாழ்வில் முன்னேத்து செல்லும். நம்மை ஒழுங்கு படுத்தும். நம் வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்ற உதவும். அதுப்போல நண்பர்களே நம்மை நல்வழிப்படுத்தி முன்னேற்றுவர். நம் வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்ற உதவுவர். ஊக்கத்தையும் இழக்கக்கூடாது. நல்ல நண்பர்களையும் இழக்கக்கூடாது. தீய நட்புகளையும் வைத்துக்கொள்ளக்கூடாது. 

ஒப்புமை

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக. (உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக; அதுபோல, அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக. இது தீக்குணத்தார் நட்பைத் தவிர்க வென்றது.

மு.வரதராசனார் உரை
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

குறள் 795
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
அழச் - அழுதல் - அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்

சொல்லி - சொல்(லு)-தல் - col-   5 v. tr. [K. sol,M. colluka.] 1. To say, speak, tell, mention,utter, express; பேசுதல் சொல்லுதல் யார்க்குமெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்(குறள், 664). 2. To recite, repeat, relate, quote;திருப்பிக்கூறுதல். சொன்னதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை 3. [M. colluka.] To dictate, command; கட்டளையிடுதல் மூத்தோர் சொல்லியதைமீறாதே. 4. To advise; புத்திகூறல். 5. To inform; அறிவித்தல் யாருக்கென் சொல்லுகே னன்னைமீர்காள் (திவ். திருவாய். 9, 9, 7). 6. To praise;புகழ்தல். தோளையே சொல்லுகேனோ (கம்பரா.மாரீச. 73).  

அல்லது - தீவினை; தவிர

இடித்து - இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல்

வழக்கு - இயங்குகை; உலகவழக்கு; செய்யுள்வழக்கு; என்னும்இருவகைவழக்குகள்; இயல்புவழக்குதகுதிவழக்குகள்; பழக்கவொழுக்கம்; நீதி; நெறி; நீதிமன்றத்தில்முறையிடுதல்; விவகாரம்; வாதம்; வண்மை.

அறிய - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

வல்லார்  - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை

ஆய்ந்து - ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்

முழுப்பொருள்
நாம் தவறு செய்தாலோ அல்லது தவறு செய்ய எண்ணினாலோ அத்தவறுக்காக நம்மை மனம் வருந்த செய்து அல்லது அழச்செய்து நம்மை நல்வழிப்படுத்தக்கூடிய உலக நெறிகளையும் இயல்பையும் ஒழுங்கையும் அறிந்துணர்ந்த திறமை உள்ளவரை ஆராய்ந்து நட்பாக/ உறவாக கொள்ள வேண்டும். 

ஒரு நட்பு நல்ல நட்பாக இருக்குமாயின் அது நாம் அழுதாலும் பரவாயில்லை என்று, வருந்தும்படியாக நேரடியாக நம் தவறைச் சொல்லும்; எப்போது தட்டிக் கேட்டு, இடித்துரைக்க வேண்டுமோ, உரிமையோடு அவ்வாறும் செய்யும். 

இது ஒரு முக்கியமான ஒரு குறள். பலர் நமக்கு எதுக்குடா வம்பு, அவன் சொன்னாலும் கேட்க மாட்டான் அல்லது அவனே கஷ்டப்படுகிறான் அல்லது அவனே கற்றுக்கொள்வான் அல்லது காலம் கற்றுத்தரும் அல்லது எனக்கு பல வேலைகள் இருக்கிறது அல்லது நாம் என்ன சொன்னாலும் அவன்தான் செய்ய வேண்டும் அல்லது எவ்வளவுதான் ஒருவனுக்கு சொல்வது அவன் செய்யவில்லையே அல்லது அவன் நம்மை கேட்காமல் எப்படி அவனிடம் இதைப்பற்றி உரையாடுவது என்று சப்பை கட்டுக்கட்டாமல் தன்  நண்பன் தவறு செய்தால் அறச்சீற்றம் கொண்டு நண்பன் அழுதாலும் பரவாயில்லை என்று உரிமையாக கண்டிக்கும் நண்பனே நண்பன். 

“அழஅழச் சொல்லுவார் தமர், சிரிக்கச்சிரிக்கச் சொல்லுவார் பிறர்” என்ற பழமொழியொன்றுண்டு. 

”உளைய உரைத்து விடினும்” (பழமொழி 2999)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக்கருதின் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க. ('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.).

மணக்குடவர் உரை
குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது நட்பை ஆராய்ந்து கொள்க. இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

குறள் 793
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
குணமும் - குணம் -  பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிகஇராசததாமதமாகியமூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு.

குடிமையும் - குடிமை - உயர்குலத்தாரதுஒழுக்கம்; பிறந்தகுடியைஉயரச்செய்தல்; குடிப்பிறப்பு; அரசரதுகுடியாயிருக்குந்தன்மை; குடித்தனப்பாங்கு; அடிமை; குடிகளிடம்பெறும்வரி.

குற்றமும் - குற்றம் -  பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

குன்றா - குறையாத, குறைவில்லாத

இனனும் - இனன்  - சூரியன்; உறவினன்; ஒத்தவன்; ஆசிரியர்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

யா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ய்+ஆ); யாவை; ஓர்அசைச்சொல்; ஒருமரவகை; அகலம்.

யாக்க - யாத்தல் - செய்யுளமைத்தல்; கட்டுதல்; பிணித்தல்; நீர்முதலியனஅணைத்தல்; விட்டுநீங்காதிருத்தல்; சொல்லுதல்.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
யாரை எவ்வாறு கண்டெடுத்து நட்புக்கொள்ள வேண்டும் ?
1. குணம் - ஒருவருடைய குணத்தை ஆராய வேண்டும். அவர் அறவழி சார்ந்தவரா என்று ஆராய வேண்டும். நற்குணங்கள் கொண்டவரா என்று ஆராயவேண்டும். நற்குணங்கள் அல்லாதவரிடம் அறம் அல்லாதவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

2. குடிமை - ஒருவர் எத்தகைய குடியை சேர்ந்தவர் என்றுமட்டும் பாராது அவர் உயர்குடியை சேர்ந்தோர் கொண்டுள்ள ஒழுக்கத்தை கடைபிடிப்பவரா என்று ஆராய வேண்டும். ஒழுக்கம் கடைபிடிக்காதவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

3. குற்றம் - ஒருவர் குற்றங்கள் புரிகிறவரா என்று ஆராய வேண்டும். பிறருக்கு தீங்கு விளைவிப்பவரா என்று ஆராயவேண்டும். குற்றங்கள் புரிகிறவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

4. குன்றா இனன் - குன்றாத உறவினர்கள் சுற்றத்தார்கள் உள்ளவரா என்று ஆராய வேண்டும். ஏனெனில் பிறரிடம் கண்ணோட்டம் / தாட்சிணியம் இருப்பவரிடம் மக்கள் சூழ்வர். அதற்கு மாறாக ஒருவரை விட்டு பலர் விலகி இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒருவித காரணம் அல்லது ஒவ்வாமை இருக்கும். அது என்னவென்று ஆராய வேண்டும். ஒருவேளை இவர் நம்பத்தகாதவராக இருக்கலாம். அல்லது பொறாமை கொள்பவராக, தீங்கு விளைவிப்பவராக, ஒழுக்கமல்லாதவராக இருக்கலாம். அத்தகையவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

மேற்சொன்ன நான்கையும் நன்கு ஆராய்ந்து நற்பண்புகள் கொண்ட அறவழியில் செல்கிற ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிற குற்றங்கள் புரியாத எல்லோராலும் விரும்புகின்றவரை நட்பாக கொள்ளவேண்டும். 

இக்கருத்தையே ஒட்டிய நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது. “ஒருவனை மனம் விரும்பி நண்பனாக ஏற்ற பிறகு, அவனது பண்பு நலன்கள் என்ன, குற்றங்கள் யாவை என்று ஆராய்ந்து திரிவேனாகில், ஒலி கடல் சூழ் உலகத்தார் என்னைப் பார்த்து இகழ்ந்து சிரிக்குமாறு நான், நண்பனின் குற்றத்தை மறைக்காது வெளிப்படையாகத் தூற்றுபவன் செல்லும் நரகத்தைச் சென்றடைவேனாக”. அப்பாடலானது:

குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக (நாலடி 230)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க -அவனோடு நட்புச் செய்க. (குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.

மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை

குறள் 792
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
ஆய்ந்து - ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

ஆய்ந்து - ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

கொள்ளாதான் - கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு.

கடைமுறை - கடைசிமுறை; முடிவு; இழிநிலை.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்

சாம் - சா - சாதல் - இறத்தல்

துயரம் - துன்பம்; மனத்துக்கம்; இரக்கம்; மழை

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
நாம் நமது தாய் தந்தையரை தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் அவர்கள் நம் வாழ்வில் பல ஆண்டுகாலம் நம்முடன் வருவர். ஆனால் நமது மற்ற உறவுகளை நட்புகளை தேர்ந்தெடுக்க முடியும். அதனுடைய பொறுப்பு நம்மிடமே இருக்கிறது. ஏனெனில் ஒரு நல்ல நட்பு நம்முடன் பல ஆண்டு காலம் உடன் வந்தால் அது நம் வாழ்வில் ஆக்கப்பூர்வமாக வழிநடத்தும். அதுவே தீய நட்பாக இருந்தால் சிறிது காலமே ஆனாலும் பல ஆண்டுகளுக்கு நம்மில் தவறான ஆதிக்கத்தை செலுத்தி நம் வாழ்வை கெடுத்துவிடும். நமது சூழ்நிலைகளுக்கும் நமது செயல்களுக்கும் நாம் நடந்துக்கொள்ளும் விதத்திற்கும் நெருங்கியத்தொடர்பு உண்டு.

ஆதலால் நமது நட்பை, நமது அருகில் உள்ளவர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆராய்ந்து ஆராய்ந்து (சோதனை செய்து, நுணுகி நுணுகி) நமது நட்புகளை நம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவருடைய பண்பு நலன்களையும், செயல்முறைகளையும் பலவாராக, பலநேரங்களில் நோக்கி, நன்கு ஆராய்ந்து, அவரைப் பற்றி தெளிந்தபின்னரே நட்பென்று கொள்ளாதானுடை நட்பு.

அப்படி ஆராயாமல் தீய நட்புகள் வைத்துக்கொண்டால் நமக்கு இழிநிலை மட்டும் தராது நமக்கு இறப்பதற்கு சமமான துன்பத்தையும் மனதுக்கத்தையும் தரும். 

மேலும்:
பழமொழிப்பாடலொன்று ஆராயாமல் கொண்ட நட்பைப் பற்றி, இவ்வாறு கூறுகிறது. அன்புடையாராகவே இருப்பினும், ஆராயாமல் ஒருவரோடு கொண்ட நட்பு, இழிவைத்தந்துவிடும் என்று. அப்பாடல் வரிகள்:

“அளிந்தார்க்கண் ஆயினும் ஆராயானாகித் 
தெளிந்தான் விளிந்து விடும்”  (பழமொழி 42)

ஆராயாமல் நட்பு கொள்வதால் வரும் தீமையைப் பற்றி நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.

இது ஆராயாது நட்பு கொண்டவரை, முன்னிலையில் விளித்து, இவ்வாறு கூறுகிறது. “நீ சிலரை நற்குணம் உடையவர் என மிகவும் மதித்து நட்புக் கொள்கிறாய்! அப்படி நீ நட்புக் கொண்ட அவர்களிடம் உண்மையிலேயே நற்குணம் இல்லையானால், அவர்களைச் சார்ந்தவனே! உனக்கு நேரும் துன்பத்தினை ஓர் உவமையால் கூறுகிறேன், கேட்பாயாக! அது, ஒருவன் வாசனை மிக்க சந்தனம் இருக்கிறதென நினைத்துச் செப்பைத் திறந்தபோது உள்ளே பாம்பைப் பார்த்தது போலாம்!”

ஒரு நல்ல நட்பு அல்லது உறவுகள் 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாகிய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும். ('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேலவாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
குற்றமும் ஆய்ந்து குணமும் ஆய்ந்து கொள்ளாதான் கொண்ட நட்பு, பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும். இஃது ஆராயாமையால் வருங்குற்றங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

குறள் 791
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நாடு - nāṭu   III. v. t. aim at, seek, inquire, தேடு; 2. desire earnestly, விரும்பு; 3. scent, (as dogs a hare) மணம்பிடி; 4. (fig.) reach எட்டு
நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

நாடாது - தேடாமல் ; ஆராயாமல் 

நட்டால் - naṭṭal   v. n. loving (நள்ளு); 2. transplanting, நடல். 


நட்டலின் - நடுவதை போன்று 

கேடு  - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

இல்லை -  வேறு இல்லை 

நட்டபின் -  நட்ட பின்பு 

வீடு மனை; விடுகை:விடுதலை; வினைநீக்கம்; முடிவு; அழித்தல்; படைப்பு; வீடுபேறு; துறக்கம்; இராசி; சதுரங்கத்தில்காய்கள்இருத்தற்குரியஇடம்; தேற்றாமரம்; ஒன்றைக்குறிக்கும்குழூஉக்குறி.

இல்லை - இல்லை 

நட்பு சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

ஆள்பவர்க்கு - ஆள் - ஆண்மகன்; திறமையுடையோன்; வீரன் காலாள் கணவன் தொண்டன் ஆட்செய்கை; வளர்ந்தஆள்; ஆள்மட்டம் அரசு தொட்டால்வாடி பெண்பாற்பெயர்விகுதி; பெண்பால்வினைமுற்றுவிகுதி.

முழுப்பொருள்
பல தளங்களில் இளமைக்கால நண்பர்களை பற்றி பெரிதாக கூறுவார்கள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி அமைந்த நட்பு என்று. இளமைக்கால நட்பென்பது இயற்கையாக நடக்க கூடிய ஒன்று. தாய் மற்றும் குடும்ப உறவுகள் போல இளமைக்கால நண்பர்களை தேர்ந்தெடுக்க முடியாது. அதிகபட்சம் நமது பெற்றோர்கள்  நமக்கு நல்ல நண்பர்களை அளிக்ககூடிய சூழலையளிக்கமுடியும்.  அதனை தாண்டி ஒருவர் ஒன்றும் செய்ய முடியாது.

நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும் என்று வள்ளுவர் அறிவுருத்துகிறார் ஏனெனில் ஒரு மரத்தை நட்டு அது வளர்ந்த பின்பு அதனை அவ்வளவு எளிதாக பிடிங்கி எரிய முடியாது அப்படியே எரிந்தாலும் அதற்காகும் செலவு நேரம் மற்றும் இதுவரை விரயமான நேரம் ஆகியவற்றை மீட்டு எடுக்க முடியாது. ஆதலால் மரத்தை நடும் முன்பு மரம் நடும் இடம் , தட்பவெட்ப நிலை, மண் மற்றும் மரத்தின் குணங்களை முழுவதுமாக ஆராய்ந்து நட வேண்டும். இல்லையென்றால் மரத்தின் பயனை (தீயவையாக இருப்பினும்) நாம் அறுவடை செய்து ஆகா வேண்டும்.

ஆதலால் வாழ்க்கையில் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்ளும் முன்பு அல்லது தேர்ந்தெடுக்கும் முன்பு அவரை பற்றி முழுவதுமாக ஆராய வேண்டும். ஏனெனில் நட்புகொண்ட பிறகு அதில் இருந்து விலக முடியாது. நட்பை முறிப்பதும் நல்ல செயல் அல்ல எளிதான செயலும் அல்ல. இவற்றையெல்லாம் விட மனதை அதிலிருந்து தூக்கி எரிய முடியாது. விடுதலையே கிடையாது. ஏனெனில் நினைவெனும் கோல் புண் பட்ட இடத்திலே படிந்து  ரணத்தை உண்டாக்கும்.

மேலும், சிறுமைகளை கண்டு அஞ்ச வேண்டும். ஆன்றோர்களும் சான்றோர்களையும் நட்பாக கொண்டால் நாம் அவர்களிடம் கற்றுக்கொண்டு முன்னேற முடியும். ஆனால் சிறுமைகளிடம் சிக்கிக்கொண்டால் நம்மை சிறுமையிலேயே ஆழ்த்திவிடுவார்கள். இங்கே பொருளாதாரம் ஒரு பொருட்டல்ல. குணமும் மனமும் இங்கே முக்கியம்.

ஆதலால் ஆராயாமல் நட்புக்கொள்வதை விட தீமையான ஒன்று வேறு இங்கு இல்லை என்றென்கிறார் திருவள்ளுவர்.

அப்படி ஒவ்வொருவரும் நினைத்தால் சான்றோர்கள் அவர் கீழே உள்ளவர்களிடமும் நட்புக்கொள்ள முடியாது அல்லவா? அதனால் தான் இங்கே திருவள்ளுவர் ஆராய்ந்து என்று கூறுகிறார். சான்றோராக இருப்பினும் மற்றவரிடம் பழகும் பொழுது அவரது எண்ணங்களை ஆராய்ந்து இவரால் நமக்கு தீங்கு (தீ குணங்கள், சிறுமைகள்) வராது என்று இருப்பின் அவர் தொடர்ந்து நட்பு கொள்ளலாம்.

நட்பிற்கு  சுற்றம் என்ற பொருளும் உண்டு. ஆதலால் நாம் ஒரு வீடு வாங்கும் முன் எவ்விடத்தில் வாங்குகிறோம் என்பதை அவசியம் ஆராய்ந்து வாங்க வேண்டும் (குடி புகுந்தாலும் சரி). நாம் அங்கு சுற்றத்துடன் அவ்வளவு பழகாவிட்டாலும் நமது பிள்ளைகள் அங்கு தான் அதிகம் ஓடி விளையாடி  பழகுவர். நண்பர்களை தேர்ந்தெடுப்பர்.

ஒப்புமை
இக்கருத்தையொட்டிய நற்றிணைப் பாடலொன்று, இவ்வாறு கூறுகிறது. (32:8-9) “நாடி நட்பின் அல்லது நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே”

“.....................பனிநீர்ச் சேர்ப்பனொடு
நாடா தியைந்த நண்பின தளவே” (நற் 378:11-2)

”மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇ இப் பின்னைப் பிரிவு” (நாலடி 220)

“கெழீஇக் கலந்தபிற் கீழ்காணார்” (சிறுபஞ்ச.37)

“பெரியோர் நண்படைந்தார் பெயர்பவோ” (சீவக 2589)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நட்பு ஆள்பவர்க்கு நட்ட பின் வீடு இல்லை - நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதலுண்டாகாது; நாடாது நட்டலின் கேடு இல்லை - ஆகலான் ஆராயாது நட்புச் செய்தல்போலக் கேடுதருவது பிறிதில்லை. (ஆராய்தல் : குணம் செய்கைகளது நன்மையை ஆராய்தல். கேடு - ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின், 'வீடு இல்லை' என்றும் அவ்வேற்றுமை இன்மையான் அவன்கண் பழி பாவங்கள் தமவாமாகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி, 'நாடாது நட்டலின் கேடு இல்லை' என்றும் கூறினார்.) .

மணக்குடவர் உரை
நட்பை விரும்பியாள்பவர்க்கு ஒருவனை ஆராயாது நட்புச் செய்வதுபோலக் கேடு தருவதில்லை: நட்டபின் அவனை விடுதலில்லை யாயின். இது நட்பாராய்தல் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
There is no danger greater than building a relationship without thoroughly researching / analyzing / understanding a person. Because, once you build a relationship, there is no liberation from that because any quarrel/infighting will hurt or the memories of the relationship will haunt you. 

Questions that I ask to the kid
What is dangerous? How can you avoid it?
Is it easy to cut a relationship that has been there for a significant amount of time?
Is there is a freedom from relationship? Why? How can you avoid any dangerous relationship?

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு

குறள் 794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறந்து -  பிறத்தல் - வெளிவரல்; தோன்றுதல்.

தன்கண்  - தன்னுடைய கண்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நாணுவானைக் - நாணுபவன் - வெட்கப்படுகின்றவன், பயபடுகிறவன், அஞ்சுகிறவன்

கொடுத்தும் - koṭu-   11 v. tr. [K. koḍu,M. koṭu.] 1. To give, grant, supply; ஈதல் கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க்கு (குறள், 1005).2. To bring forth; பெற்றெடுத்தல். பார்வதியேழுலகுங் கொடுத்தாள் (பிரமோத். 9, 61). 3.To divide, distribute, as a sum of money;பங்கிடுதல். இந்தத் தொகையைப் பத்துப்பேருக்குக்கொடு. 4. To sell; விற்றல் தில்லை முன்றிற்கொடுக்கோ வளை (திருக்கோ. 63). 5. To allow,permit; உடன்படுதல் மலரன்றி மிதிப்பக் கொடான்(திருக்கோ. 303). 6. To lose by death, asgiving to Yama; சாகக்கொடுத்தல். நீ பயந்தகோட்டானைத் தானே கொடு (தனிப்பா. i, 35, 68).7. To abuse roundly; திட்டுதல் நன்றாய்க் கொடுத்தாளா? வேணும், வேணும் 8. To belabour,thrash; அடித்தல் --aux. An auxiliary verb, asin சொல்லிக்கொடு, முடித்துக்கொடு; ஒரு துணைவினை

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

வேண்டும் - வேணும்; vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
நாம் ஒவ்வொருவரும் சில சமயம் யாரிடம் நட்புக்கொள்வது என்று யோசனை செய்யும் காலம் வரும். நம்முடைய நடப்பு நட்புகள் நல்ல நட்புகளல்ல என்று தோன்றும். வாழ்விற்கு நல்ல நட்புகள் தேவை என்று தோன்றும். யார் நல்ல நண்பர்கள்? அவர்களிடம் எப்படி உறவுகொள்வது?

நல்ல குடியில் (குடும்பத்தில்) பிறந்து தன் குடும்பத்தின் புகழ் உயர்வதற்கு தானும் ஒரு காரணமாய் அமைவோர் நல்ல மனிதர்கள். அத்தகையவர்கள் எத்தகைய தீய வழிகளிலும் அறமற்ற வழிகளிலும் தன்னை ஆட்கொள்ளமாட்டார்கள் ஏனெனில் அவர் பழிக்கும் குற்றத்திற்கும் அஞ்சி வெட்கப்பட்டு செய்யாமல் நின்றுவிடுவார்கள். சோம்பல் தேக்கம் என்று எதிலும் திளைக்கமாட்டார்கள். அதேப்போல தன்னுடைய நட்புகள் தீய வழிகளில் ஈடுபடவும் விடமாட்டார்கள். ஏனெனில் அப்படி விட்டால் அதுவர்களுக்கு பழியை சேர்க்கும் - தன்னை சுயநலவாதியாய் தோற்றுவிக்கும்.

ஆதலால் அத்தகைய நல்ல மனிதர்களிடம் எப்பொருளை கொடுத்தாவது அவர்களிடத்தில் நட்புக்கொள்ள வேண்டும். இங்கே பொருள் கொடுக்க வேண்டும் என்றால் பொன் பணம் என்ற அர்த்ததில் இருக்காது ஏனெனில் அதனை நற்குடியில் பிறந்தவர்கள் ஏற்கமாட்டார்கள். இது கண்டிப்பாக நல்ல மனிதர்கள் சிறுமைகளிடம் வெறுக்கும் கீழ்மைகளை விட வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் இருக்கும். கீழ்மைகளை விடுவதே நட்பிற்கான விலையாக ஒருவர் கொடுக்க வேண்டும். நல்லது தானே?! அதுமட்டுமின்றி அதே நண்பர் ஒரு இடரில் சூழ்ந்துள்ளப் பொழுது அவருடன் உடனிருந்து அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லையேல் துன்பத்தின் போது விலகினால் அந்த நட்பு நீடிக்கும் என்று சொல்லமுடியாது. 


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின்கண் பிறந்து தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது. (குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியைஅஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம், இவைஇரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்கஎன்பதாம்.).

மணக்குடவர் உரை
மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்.

மு.வரதராசனார் உரை
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
  சரியான தாய் தந்தை பெற்றெடுக்க
  சத்தியமே வாழ்க்கையெனக் கொண்டு நிற்க
  விரிகின்ற மனத்தாராய் வாழ்ந்து நிற்கும்
  வெற்றியெல்லாம் நல் வழியில் பெற்று நிற்கும்
  தெளிவான நல்லவரை நமைக் கொடுத்தும்
  தேர்ந்து கொள்ள வெண்டும் நல்ல நட்பாய் இங்கு

கேட்டினும் உண்டோர் உறுதி

குறள் 796
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை 
நீட்டி அளப்பதோர் கோல்
[ பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல் ]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கேட்டல்செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்

கேட்டினும் - நமக்கு கேடு உண்டாகும் தருணத்திலும் 

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

உறுதி - திடம்; திரம்; வலிமை; நன்மை; இலாபம்; கல்வி; மேன்மை; சன்மார்க்கஉபதேசம்; உறுதி; தளராமை; ஆட்சிப்பத்திரம்; பிடிவாதம்; விடாப்பிடி; பற்றுக்கோடு; நல்லறிவு; வழக்கின்திடம்; பயன்.

உண்டோர் உறுதி  - உண்டு ஒரு நன்மை (உறுதியாக தெரிந்து கொள்ளக் கூடிய)

கிளைஞர் - உறவினர்; நட்பினர்; மருதநிலமாக்கள்.

கிளைஞரை - நமது நண்பர்களை 

நீட்டி - நீட்டல் நீட்டுதல்; குற்றுயிரை நெட்டுயிராக இசைக்கும் செய்யுள் விகாரவகை; காண்க:நீட்டலளவு(வை); சடையை நீட்டி வளர்த்தல்; பெருங்கொடை

அளத்தல் - அளவிடுதல்; வரையறுத்தல் பிரமாணம் கொண்டு அறிதல்; கொடுத்தல் கலத்தல் எட்டுதல்:கருதுதல்; அளவளாவுதல் வீண்பேச்சுப் பேசுதல்.

கோல் கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

நீட்டி அளப்பதோர் கோல் - (நண்பனின் குணத்தினை) நீட்டி அளப்பதிர்கான கருவி அல்லது தருணம்

முழுப்பொருள்
நமக்கு வரும் கெடும் துன்பங்களும் பொதுவாக கவலை அடைய செய்தாலும் அந்த தருணங்களால் உண்டாகும் சில நன்மைகளும் உண்டு. அது நம் நட்பானவர்கள், சுற்றி உள்ளவர்களின், இயல்பினை சரியாக புரிந்து அளந்து கொள்ள கோலாக உதவும் எனக் கூறுகிறார் வள்ளுவர்.

அதாவது நம்  வளமான காலங்களில் நம்மை சுற்றி உள்ளவர்கள் இயல்பாகவே இனிமையாக பழகுவர். அப்பொழுது அவர்களின் உண்மையான இயல்புகளை/குணங்களை எடை போடா இயலாது. ஒரு துன்பம் வரும் போது, அவர்கள் நம்மோடு தோள் கொடுத்து தாங்கி பிடிகின்றனரா அல்லது மறைந்து விடுகின்றனரா என்பதை வைத்து அவர்களை எளிதில் எடை போட்டு விடலாம். .
உதாரணமாக கொக்கு நீர் வரத்து நன்றாக உள்ள குளங்களில் தான் தாங்கும். நீர் வரத்து குறைந்த உடன் அந்த குலத்தை விட்டு பறந்து சென்று விடும். இது தீய நட்புக்கு உதாரணமாகும். 

அதே போல் நல்ல நட்பிற்கு, இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக மகாபாரத்தில் வரும் சிறு கதையை கூறலாம் (நன்றி: அர்த்தமுள்ள இந்துமதம்)

தர்மர் நட்பை பற்றி பீஷ்மரிடம் வினவ, பீஷ்மர் கீழ்க்கண்ட கதையை கூறுகிறார். 

காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், விடமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்பட்டு மானைத் தேடிப் போனான். அங்கு ஒரு பெரிய வனத்தில் மான்கள் அருகிலிருக்கக் கண்டு, மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன், ஒரு மானையடிக்கக் குறிவைத்துக் கூரிய பாணத்தை விடுத்தான். தடுக்க முடியாத அந்தப் பாணம் குறி தவறியதால், அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த மரத்தின் மீது பாய்ந்தது. கொடிய விடந்தடவிய கணையினால் மிக்க வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும் இலைகளும் உதிர்ந்து உலர்ந்து போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கியிருந்த அத்தருவானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்துகளில் வெகுநாள்களாக வசித்திருந்த ஒரு கிளி, அம்மரத்தின் மேலுள்ள பற்றினால் தன்னிருப்பிடத்தை விடவில்லை. நன்றியறிவுள்ளதும் தருமத்தில் மனமுள்ளதுமாகிய அந்தக் கிளி வெளியிற் சஞ்சரியாமலும், இரையெடாமலும், களைப்புற்றும், குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே உலர்ந்தது. மரஞ்செழிப்புற்றிருந்த போது அதனிடஞ் சுகித்திருந்தது போல், அது உலர்ந்து துன்புறும்போதும் அதனை விட்டுப் பிரியாமல் தானுந்துன்புற்றிருந்தது. அந்தக் கிளியின் உயர்ந்த குணத்தை நன்கு நோக்குங்கள்.
சிறந்த குணமுள்ளதும், மேலான சுபாவமுள்ளதும் மனிதர்க்கு மேற்பட்ட நல்லொழுக்கமுடையதுமான அக்கிளி, அம்மரத்தைப் போலவே சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தேவேந்திரன் திகைப்படைந்தான். `திரியக் ஜாதிகளுக்கு இல்லாத கருணையை இந்தப் பட்சி அடைந்திருப்பது எவ்வகை?’ என்று நினைத்தான்; பிறகு, `இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எல்லாப் பிராணிகளிலும் குணம், குற்றம் எல்லாம் காணப்படுகின்றன’ என்ற எண்ணமும் இந்திரனுக்கு உண்டாயிற்று.
இங்ஙனமெண்ணிய இந்திரன், மானிட உருவெடுத்து ஓர் அந்தணன் வடிவமாகப் பூமியில் இறங்கி, அந்தப் பட்சியைப் பார்த்து, “ஓ பட்சிகளிற் சிறந்த கிளியே! உன் தாயாகிய தாய் உன்னால் நல்ல சந்ததியுள்ளவளாக ஆகிறாள். கிளியாகிய உன்னை நான் கேட்கிறேன். உலர்ந்துபோன இந்த மரத்தை ஏன் விடாமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.
இமையவர் தலைவனாம் இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட்ட கிளியானது அவனுக்குத் தலைவணங்கி நமஸ்காரம் புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு, நான் தவத்தினால் உன்னைத் தெரிந்து கொண்டேன்” என்று சொல்லிற்று. தேவேந்திரன் “நன்று! நன்று” என்று கூறி `என்ன அறிவு’ என்று மனத்திற்குள் கொண்டாடினான்.
இவ்வாறு சிறந்த செய்கையுள்ளதும், தருமத்தையே முக்கியமாகக் கொண்டதுமாகிய அந்தக் கிளியைப் பார்த்து இந்திரன், தான் கேட்பது பாபமென்று தெரிந்திருந்தும் கேட்கத் தொடங்கினான்.
“அறிவிற் சிறந்த பறவையே! இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து, பறவைகளுக்கு ஆதரவற்ற இம்மரத்தை ஏன் காக்கிறாய்? இது பெரிய வனமாயிருக்கிறதே! இலைகளினால் முடப்பட்ட பொந்துகளும் சஞ்சரிக்கப் போதுமான இடமுள்ள இன்னும் அழகான மரங்களும் அநேகம் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சியடைந்து, சக்தியற்று, இரசம் வற்றி ஒளிகுன்றிக் கெட்டுப் போன இந்நிலையற்ற மரத்தைப் புத்தியினால் ஆராய்ந்து பார்த்து விட்டு விடு.”
அமேரேசனுடைய இந்த வார்த்தையைக் கேட்டு தர்மாத்மாவான அந்தக்கிளி, மிகவும் நீண்ட பெருமுச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று.
“மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாவராலும் வெல்ல முடியாத தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைத் தெரிந்து கொள். அநேக நற்குணங்கள் பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமைப் பருவத்தில் நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்படாமல் இருந்தேன். மழை, காற்று, பனி, வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இத்தருவில் சுகித்திருந்தேன்.
வலாரியே! தயையும் பக்தியுமுள்ளவனாக வேறு இடம் செல்லாமலிருக்கும் என் விடயத்தில் அனுக்கிரகம் வைத்து என் பிறவியை ஏன் பயன்படாமற் செய்கின்றாய்? நான், அன்பும் பக்தியுமுள்ளவன். பாவத்தைப் புரியேன். உபகாரிகள் விடயத்தில் தயை செய்வதுதானே தருமத்திற்கு முக்கியமான இலக்கணம். தயை செய்வதே நல்லோர்களுக்கு எப்போதும் மனத்திருப்தியை உண்டாக்குகிறது. எல்லாத் தேவர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே, நீ தேவசிரேட்டர்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே! வெகுகாலமாக இருந்த மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை அடுத்துப் பிழைத்தவன், கெட்ட நிலைமைக்கு வந்தவுடன், அதை எப்படி விடலாம்?”
எக்காலமு மிப்பாதப மெனதாமென வைகி
முக்காலே முதிருங்கனி முசியாது கர்ந்தேன்
இக்காலமி தற்கிவ்வண மிடைறு கலந்தாற்
சுக்காதகல் வதுவோவுணர் வுடையோர்மதி தூய்மையே!
- மகாபாரதம்
இவ்வாறு கூறிய, பொருளடங்கியதும், அழகுடையதுமாகிய கிளியினது வசனங்களால் மகிழ்வுற்ற இந்திரன், அதன் நன்றியறிவையும் தயையையும் எண்ணித் திருப்தியுற்று, தருமம் தெரிந்த அக்கிளியைப் பார்த்து, “ஒரு வரம் கேள்!” என்று சொன்னான்.
அன்பர்காள்! அக்கிளியானது தன் நன்மையைக் குறித்து வரம் கேட்கவில்லை. அதனுடைய பெருங்குணத்தை உற்று நோக்குங்கள்!
எப்போதும், பிறர் நோவாமையைப் பெரிதாகக் கருதிய அந்தக் கிளி, “ஏ தேவர் கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்துத் தழைத்து ஓங்க வேண்டும்!” என்றது.
அப்பறவையினுடைய உறுதியான பக்தியையும் நிரம்பின நல்லொழுக்கத்தையும் அறிந்து களிப்புற்ற இந்திரன் உடனே அம்மரத்தின் மீது அமிர்தம் பொழிந்தான். அதனால் அத்தரு, கனிகளும், இலைகளும், கிளைகளும் உண்டாகித் தழைத்தது.
கிளியினுடைய உறுதியான பக்தியால் அம்மரம் முன்னைக் காட்டிலும் மிகவும் நன்றாகச் செழித்தது.
நன்றியறிவு, தயை இந்தக் குணங்களின் பயனாகிய அச்செய்கையினால் கிளியும் அத்தருவில் இனிது மகிழ்ந்திருந்தது. தன் ஆயுள் முடிந்த பிறகு இந்திரலோகத்தை அடைந்தது.

சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து (11-SEP -2023)
திருமணம் போன்ற விசேஷங்களுக்கு முந்திச் செல்கிறோமோ இல்லையோ, இறப்புக்கு உடனே சென்று நிற்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பதுண்டு.
மகிழ்வை விட , துக்கம் தான் சட்டென்று கை நீட்டிப் பற்றிக் கொள்ள வேண்டியது.
அமரர் பாரதி மணி அவருடைய புத்தகத்தில் எழுதியவற்றில் எனக்கு இப்போது நினைவில் இருப்பது டெல்லியில், இறப்புகளுக்கு அவர் உதவி செய்த அத்தியாயம் தான்.
கஸ்தூர் பா வின் சிதையைச் சரியாக அடுக்காததால், தீப்பற்றிக் கொள்ள நேரமாகிறது. மொரார்ஜி குடும்பத்தினைச் சேர்ந்த சாந்தி குமார், காந்தியின் அனுமதி பெற்று, சிதையைச் சற்று மாற்றிக் குலுக்கி விடுகிறார். தீ வேகமாகப் பிடிக்கிறது.
எப்படி இவ்வளவு இளம் வயதில் இந்த அனுபவம் எனக் காந்தி கேட்க, யார் வீட்டில் இறப்பு என்றாலும் முதலில் சென்று இறுதி வரை அனைத்திற்கும் உடன் நிற்க வேண்டும் எனத் தன் பாட்டி சொல்லித் தந்திருப்பதாக அவர் பதில் தருகிறார்.
காந்தியிடம் இருந்த மிக அழகான பண்புகளில் ஒன்று, அவர் எங்கு பயணம் சென்றாலும், அந்தந்தப் பிரதேச தேசிய போராட்டக்காரர்களின் வீடுகளில் நோய்வாய்ப்பட்டவர் இருந்தால், சிரமம் பார்க்காமல் அவர்களைச் சென்று பார்த்து ஆறுதல் கூறிவருவது. அது குறித்து விரிவாகவே எழுதலாம். ❤️
கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல் எனச் சும்மாவா சொல்கிறது வள்ளுவம்?

ஒப்புமை
“........நிலையாத நிலையுடையேன் நேய நெஞ்சின்
நலங்காண நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பி னின்றும்
விலங்கானேன் ஆதலினான் விலங்கினேன் இன்னுமுயிர் விட்டிலேனால்” (கம்ப.சடாயுகாண்.22)

பரிமேலழகர் உரை
அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக்கருதின் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க. ('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.).
மணக்குடவர் உரை
குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது நட்பை ஆராய்ந்து கொள்க. இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

English Meaning - As I taught a kid - Rajesh
During the time of pain, grief, distress, there is a gain too because it is a tool to stretch and gauge a friend. During happy times, everyone would love to be around us and it is no wonder they stick to stay around us. But, during difficulties, people would hesitate to be stick around us fearing we might be a burden to them. 

For e.g, Gandhi notices that his associate Bharati mani helping to fasten the the fire of Karturba Gandhi's deceased body. With Gandhi's permission, he tries to alter Kasturba Gandhi's body and fire catches fastly. When Gandhi questions Bharati Mani, he says that his granny has told him to go to any death's house as early as possible and stand till the end helping them wherever possible.
Questions that I ask to the kid
What is the gain during time of distress? Give an example

ஊதியம் என்பது ஒருவற்குப்

குறள் 797
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
ஊதியம் - இலாபம்; கல்வி; பயன்.

என்பது - என்றென்பது

ஒருவற்குப் - ஒரு மனிதனுக்கு

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

பேதையார் - அறிவில்லாதவர்கள்

பேதையார் - பேதை - அறிவிலி. (பிங்.)பிள்ளைமை விளம்பினாய் பேதை நீயெனா (கம்பரா. யுத்.மந்திரப். 72) - a simpleton, an ignorant man, அறிவிலான், தரித்திரன்

கேண்மை - கேள், நட்பு வினைதீயார் கேண்மை (நாலடி,172); கண்ணோட்டம்; உறவு.பழங்கேண்மை கண்டறியாதேன்போல் (கலித். 39, 39); வழக்கு. கிளைஞரி னெய்தாக்கேண்மையு முடைத்தே (நம்பியகப். 56).

ஒரீஇ -
ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு.

- மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.

விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்.

விடல் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.


முழுப்பொருள்
அறிவில்லாதவரிடம் (அறிவில்லாதார்களை பேதையென்பர்) நட்போ உறவோ கொள்வது தீங்கு விளைவிக்கும். அத்தகையவரிடம் தெரியாமல் கொண்ட உறவை உணர்ந்து அவர்களை விட்டு உடனடியாக விலக வேண்டும். உடனடியாக முடியாவிட்டாலும் விரைவாக (in a quick phased manner) விட்டு விட வேண்டும். அப்படி விட்டொழிப்பது தனக்கு தானே செய்துக்கொள்ளும் பெரும் நன்மையாகும் - பயன்விளைவிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

அறிவில்லாதவர்களிடம் நட்புக்கொள்வதனால் வரும் (முதல்) தீமை என்றால் ; எனக்கு முதலில் தோன்றுவது - நேரம் வீண் விரையம்.

ஒப்புமை
“தீயவரொ டொன்றிய திறத்தரு நலத்தோர்
ஆயவரை யந்நிலை அறிந்தனர் துறந்தாங்கு” (கம்ப.வரைக்காட்சி.20)

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
அறிவின்றி அடுத்தவரின் துன்பம் தீர்க்கும்
அன்பின்றி வாழ்பவரின் நட்பு தன்னை
விரைவாக விட்டொழித்தல் பெரும் பேறேன்று
வியன் உலகப் பெரும் அறிஞர் வள்ளுவனார்
தெளிவாகச் சொல்லி நின்றார் மிக இனிது
தீதான அந்நட்பை விடுதல் என்றார்
பெறுவோம் அவ்வழியதனை வள்ளுவனார்
பேச்சொன்றே தமிழருக்கு மூச்சாய்  ஆகும்

ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார்
கேண்மை ஓரீஇ விடல்

பெரிதினிது பேதையர் கேண்மை பிரிவின் கண்
பீழை தருவதொன்றில்

பரிமேலழகர் உரை
ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஓரீஇ விடல் - அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல். 

விளக்கம் 
நட்பு ஒழிந்தாலும், நீங்காக்கால் "வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே"§மாறுபோலத் தீங்கு வருதலின், 'விடல்' என்றும், நீங்கியவழித் தீங்கு ஒழிதலேயன்றி இருமையின்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின் அதனை 'ஊதியம்' என்றும் கூறினார். விளக்கம் (நாலடி. 180) தீங்குவருதலின் 'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒருவற்கு ஊதியம் என்பது-ஒருவனுக்கு வரவுப்பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇவிடல்- அறிவிலாதாரோடு தெரியாமற் செய்துகொண்ட நட்பைவிட்டுவிட்டு, அவரிடத்தினின்று நீங்கிக்கொள்ளுதலாம்.

அறிவிலாதார் தொடர்பு தீங்கே விளைத்தலால் ஒரிஇ என்றும்; அவர் தொடர்பை விட்டவிடத்தும் அருகிலிருந்தால், மூங்கிலைச் சார்ந்த சந்தனமரமும் வேதல்போலப் பின்னுந் தீங்குவருதலால் 'விடல்' என்றும்; அவரைவிட்டு நீங்கியபின் தீங்கொழிதலோடு இருமை யின்பத்திற்கும் வழியேற்படுதலால் அதனைப் 'பேறு' என்றும்; கூறினார். 'ஒரீஇ' இன்னிசை யளபெடை.

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு இலாபமென்று சொல்லப்படுவது அறிவில்லாதாரோடு நட்பாகுதலை நீங்கி விடுதல். இது பேதையார் நட்பைத் தவிர்கவென்றது. 

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை
அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.