Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மாலையோ அல்லை மணந்தார்

குறள் 1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

பொருள்
மாலையோ

அல்லை - அல்லிக்கொடி; தாய்; அல்லி. Water-lily;அல்லி;

மணத்தல் - மணம்புரிதல்; புணர்தல்; கூடியிருத்தல்; அணைத்தல்; கலத்தல்; வந்துகூடுதல்; நேர்தல்; பொருந்துதல்.
மணந்தார் - திருமணம் செய்துக்கொண்டு கூடியவர்

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உண்ணும் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்

வேலை - தொழில்; செயல்; வேலைப்பாடு; காண்க:வேலைத்திறன்; உத்தியோகம்; காலம்; கடற்கரை; கடல்; அலை; கானல்; கரும்பு; வெண்காரம்.

நீ- ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர்.
வாழி - வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோள் சொல்; ஓர்அசைச்சொல்.

பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்

முழுப்பொருள்
ஒரு நாளில் பல பொழுதுகள் உண்டு - காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை. ஒவ்வொரு பொழுதுக்கும் ஒரு தன்மை உண்டு.பொதுவாக காலை நேரங்களில் அந்த நாளை துவங்கி அந்நாளுக்கு ஆயுத்தமாகி வேலைக்கு சென்று வீடு திரும்புவோம். இரவு/ யாமத்திலும் வைகறையிலும் கூடிவிட்டு உறங்கிவிடுவோம். ஆதலால் மாலை என்பது மிக முக்கியமான ஒரு பொழுது.

திருமணத்திற்கு முன்பு காதலன் காலையெல்லாம் உழைத்துவிட்டு காதலியை தேடி வந்து மாலையில் வருவான். அந்த நேரத்தில் தான் அவர்கள் அன்பு பொழிந்துக்கொள்வார்கள். ஆதலால் மாலைக்காக காத்திருக்காத மாலை வராதா என்று ஏங்காத  காதலர்கள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். திருமணத்திற்கு முன்பு இருந்த நேரத்தில் மாலைக்காக காத்திருந்தனர். இந்த மாலை பொழுதிற்காகவே வாழ்ந்தனர். மாலையில் காதலருடன் இருக்கும் பொழுதே அவர்களுக்கு அந்த நாளுக்கான ஆக்சிஜன் (Oxygen) என்றே சொல்லலாம். மாலையின் நினைவுகளை காலையில் அசைப்போட்டு அசைப்போடு நேரத்தை கழித்தனர்.

ஆனால் இப்பொழுதோ காதலர் காதலியை மறந்துவிட்டு வேலை வேலை என்று சதாசர்வ காலமும் வேலையை கட்டிக்கொண்டு அழுகிறார். வீட்டில் ஒருத்தி இருக்கிறாளே என்று கூட இல்லை அவருக்கு. காலையில் எல்லா வேலையும் முடித்துவிட்டு அவருக்காக காத்திருக்கிறேன். ஆனால் அவரோ இன்னும் வரவில்லை. அவரின் நினைவோ என்னை பாடாய் படுத்துகிறது. அழகிய பொழுது, தென்றலின் குளுமை, மெதுவாக வீசூம் மார்கழியின் வாடை காத்து, பூக்களை போல தேகமும் பூத்து வீசும் வாசம், நட்சத்திர விண்மீன்கள் ஒடி வந்து வானத்தை நமக்காக அலங்கரிக்கும், ஏகாந்த மோகங்கள் லீலை செய்யும் இந்த வேலையில் என்னை தவியாய் தவிக்க விட்டு இருக்கிறார் என் காதலர். அவரின் நினைவுகளோ என்னை கொல்கிறது.  இப்படி அவர் இல்லாத மாலையில் ஒவ்வொரு கணமும் கொல்கிறாயே மாலையே - நீ நான் விரும்பிய மாலையே அல்ல.

இங்கே அவள் நியாயமாக கணவன் மீது கோபம் கொள்ள வேண்டும். ஆனால் காதலர் மீது கொண்டுள்ள காதலால் இவள் கோபத்தை மாலையின் மீது காட்டுகிறாள். இதனை காதலன்மீது கொண்ட காதலாகவும் பார்க்கலாம்/சொல்லலாம்.

கலித்தொகை வரிகள் மகளிரின் அந்நிலையை இவ்வாறு கூறுகின்றன.

“வாலிழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்
காலை ஆவ தறியார்
மாலை என்மனார் மயங்கி யோரே” (கலி: 119:14,6)

”ஐதேந் தகலல்குல் ஆவித் தழலுயிராக்
கைசோர்ந் தணலூன்றிக் கண்ணீர் கவுளலைப்பக்
கண்ணீர் கவுளலைப்பக் கையற்று யாம் இனையப்
புண்ணீரும் வேலின் புகுந்ததால் மாலை” (சீவக. 2050)

சிறுபொழுது
காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை.
நண்பகல் – 10 மணி முதல் 2 மணி வரை.
எற்பாடு – 2 மணி முதல் 6 மணி வரை.
மாலை – 6 மணி முதல் இரவு 10 மணி வரை.
யாமம் – இரவு 10 மணி முதல் 2 மணி வரை.
வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

காற்று
வாடை - வடக்கில் இருந்து வீசும் காற்று
சோழகம் - தெற்கில் இருந்து வீசும் காற்று
கொண்டல் - கிழக்கில் இருந்து வீசும் காற்று

கச்சான் (காற்று) - மேற்கில் இருந்து வீசும் காற்று

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, மாலைப்பொழுது வந்துழி, அதனைக் கண்டு தலைமகள் இரங்குதல். 'கனா முந்துறாத வினையில்லை' (பழமொழி.2) என்பதுபற்றிப் பகற்பொழுது ஆற்றிஇருந்தாட்கு உரியதாகலின், இது கனவு நிலை உரைத்தலின் பின் வைக்கப் பட்டது.]

(பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய். (முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். 'வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை' (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(பொழுதொடு புலந்தது)

பொழுது - மாலைப்பொழுதே!; நீ மாலையோ அல்லை - நீ முன்னாட்களில் வந்த மாலைப்பொழுதே யல்லை ; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - காதலரை மணந்து பிரிந்த மகளிரைக் கொல்லும் இறுதிக் காலமாகவே யிருக்கின்றாய், இந்நாள்.

முன்னாள் காதலரொடு கூடியிருந்த நாள்.தன்னைப் போற் காதலரைப் பிரிந்த பிறரையும் உளப்படுத்தி 'மணந்தார்' என்றாள். 'வாழி' யென்பது எதிர்மறைக்குறிப்பு.வேலை எல்லை; இங்கு வாழ்நாளெல்லையைக் குறித்தது.வேலையென்பதற்கு வேலாயிருந்தாய் என்றுரைப்பர் மணக்குடவ பரிதி பரிப்பெருமாளார்.

மணக்குடவர் உரை
பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.

மு.வரதராசனார் உரை
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!.

சாலமன் பாப்பையா உரை
பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்

குறள் 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]

பொருள்
தனிப்படர்மிகுதி - தனிமையில் நினைத்துப் புலம்புந் தலைவியின் நிலை

வாழ்தல் - இருத்தல், சீவித்தல் (ஜீவித்தல்), செழித்திருத்தல், மகிழ்தல்,
வாழ்வார்க்கு  - உலகில் வாழ்பவர்க்கு
வானம்  - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு.

பயந்து - பயம், அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை.
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
பயந்தற்றால்-

வீழ் - வீழு (விழு), ஆசி,
வீழ்வார்க்கு - ஆசைப்படுபவருக்கு (காதலிக்கு)
வீழ்வார்  - ஆசைப்படுபவர் (காதலர்)
அளிக்கும் - அளித்தல் - காத்தல் ; கொடுத்தல்; செறித்தல் ;  சொல்லுதல் ;சிருட்டித்தல். ; அருள்செய்தல். ; விருப்பமுண்டாக்குதல். ; சோர்வை நீக்குதல்
அளி - அன்பு; அருள் ஆசை வரவேற்பு எளிமை குளிர்ச்சி கொடை காய் வண்டு தேன் வண்டுகொல்லி கருந்தேனீ; மாட்டுக்காடி; தேள் கிராதி மரவுரிமரம்.

முழுப்பொருள்
இவ்வுலகில் மனிதருக்கு, விலங்குகளுக்கு, செடிகளுக்கு, கொடிகளுக்கு மற்றும் மண்ணில் வாழ்கின்ற எல்லா தாவரங்களுக்கும் இன்றியமையாத தேவை எனப்படுவது தண்ணீராகும். தண்ணீருக்கு மூலம் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும். இவற்றுக்கு மூலம் மழையாகும். ஆகவே தான் உயிர்வாழ்வோருக்கு வானம் அளிக்கும் மழை அமூதம் ஆனது. "வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று" (குறள் 11) என்று முன்னமே வான்சிறப்பு அதிகாரத்தில் மழையின் சிறப்பை திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

மழையின் சிறப்பு எனில் -> உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது.  நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே. உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும். மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார். பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.  மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும். பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும். எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது. அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

உலகில் வாழ்வோர்க்கு வானம் அளிக்கும் மழையை போல, தலைவன் மீது (தலைவி மீது) ஆசைப்படும் தலைவிக்கு தன் காதலர் செலுத்தும் அன்பே ஆகும். அந்த காதலும், அன்பும், ஆசையும், நேசமும், ஊடலும், கூடலும் நேரம் தவராது இடைவிடாது மழைப்போல செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் மழை பொய்த்தால் ஏற்படும் துன்பம் போல காதலரின் அன்பில்லாமல் தலைவியின் வாழ்வு (மழைத்துளி விழாது போனால் பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காணமுடியாததுப் போல) அரிதாகிவிடும். நிலத்தில் ஈரம் இல்லை என்றால் உழவனால் ஏரோட்ட முடியாது. அதுப்போல காதலரின் அன்பு இல்லையென்றால் அவளால் நாட்களை ஓட்ட முடியாது.

ஒப்புமை
“..................நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம்கண் அற்ற பைதறு காலைப்
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே” (நற் 22:7-11)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி; வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும். ('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது' என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)

(இ-ரை,) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி-அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்துபோன கணவர் தம்மையின்றியமையாத மகளிர்க்கு, காலமறிந்து வந்து இன்புறுத்தும் பேரன்புக் கூட்டம்;வாழ்வார்க்கு வானம் பயந்த அற்று-தன்னையே நோக்கி வாழும் மாந்தருக்கு முகில் காலம் அறிந்து பெருமழை பொழிந்தாற் போலும்.

நம் காதலர் நம்மீது அன்புகொள்ளாமையால் அவர் வந்து கூடப்பெறாது, மழையின்றி வாடும் மாந்தர் போல வாடுகின்றோம் என்பதாம். ’ஆல்’ அசைநிலை.

மணக்குடவர் உரை
காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள், உயிர் வாழ்வார்க்கு, மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது. இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின்

குறள் 1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
பிரிவு - பிரிகை, பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின் வேறுபட்ட உட்பேதம்; இறப்பு.
உரைக்கும் - உரை - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல்
வன்கண்ணர் - வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை

ஆயின் -  ஆனால்
அரிது -  அரியது, அருமை; பசுமை
அவர்
நல்குதல் -  கொடுத்தல், விரும்புதல், படைத்தல், To show deep love -> தலையளி செய்தல் [தலையளி - ideal love - உத்தம அன்பு],  To rejoice -> உவத்தல்
நல்குவர் - தலையான அன்பிற்கு பாத்திரமானவர் - விருப்பதிற்கு உரியவர்
என்னும் - என்கிற
நசை - ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம்.

முழுப்பொருள்
வேலை நிமித்தமாகவோ, போரின் நிமித்தமாகவோ நான் உன்னை பிரியப்போகிறேன் என்று மணந்துக்கூடிய என்னிடம் கூறக்கூடிய கொடுமையான நெஞ்சத்தினை கொண்டவர் என்றால் அருமையான அவர் தன்னுடைய தலையாய அன்பினை என் மீது வந்து செலுத்துவார் என்ற என் நம்பிக்கை எள்ளலுக்கு உண்டானது என்று தலைவி கூறுகிறாள்.

இவ்வுலகில் வேலைக்காக வேறு வேறு ஊரிகளில் வசிக்கும் கணவன் மனைவிமார்கள் எவ்வளவு கொடுமைக்காரர்கள். குடும்பத்திற்காக உழைக்கிறேன், பணம் ஈட்டுவிட்டால் எல்லாம் சரி ஆகிவிடும், சிறிது காலம் தியாகம் செய்தால்  நல்ல காலம் பிறக்கும் என்று எண்ணித் தங்கள் இளமையை இழக்கும் இவர்கள் எல்லாம் கொடுமையானவர்கள்.

ஒரு பிரிவு என்பது உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக எவ்வளவு கொடியது என்பது பெண் எவ்வளவு சொன்னாலும் ஆண்களுக்கு புரியாது. ஒருவேளை புரிந்தால் ஆண்கள் பிரியபோகிறேன் என்று சொல்ல மாட்டார்கள்.


(திரைப்படம்: தளபதி; பாடல்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும். (அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(தலைமகன் பிரிவுணர்த்தியதைத் தெரிவித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.)

அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின்-என் காதற்பெருக்கையுங் கவவுக்கை யிறுக்கையும் கண்டறிந்த தலைவர் தாமே, நம் முன்நின்று தம் பிரிவை யுணர்த்தும் வன்னெஞ்சராயின்; நல்குவர் என்னும் நசை அரிது-அத்தன்மையர் பின்பு நம் ஆற்றாமையறிந்து வந்து பேரன்பு செய்வரென்னும் ஆசையை விட்டுவிட வேண்டியதுதான்.

இது தலைமகள் தன் இளமையினாலும் இல்லறத் தொடக்கநிலையினாலும், பொருளின் இன்றியமையாமையையும் ஆடவர் கடமையயும் உணராது காதலொன்றையே கருதிக்கூறிய கூற்றாகும். அருமை பெரும்பாலும் நிறைவேறாமை, செலவழுங்குவித்தல் பயன்.

மணக்குடவர் உரை
பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின் அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை. இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

சாலமன் பாப்பையா உரை
நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.

மதியும் மடந்தை முகனும்

குறள் 1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]

பொருள்
மதியும் - மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.

மடந்தை - பெண்; பதினான்கு முதல் பத்தொன்பது வயது வரையுள்ள பெண்; பருவமாகாத பெண்; சேம்புவகை

முகனும் - முகன் - முகம், தோற்றம், வதனம்

அறி-தல் - புதிதாய்க் கண்டுபிடித்தல்
அறியா
பதியின் - பதி - நகரம்; பதிகை; நாற்று; உறைவிடம்; வீடு; கோயில்; குறிசொல்லும்இடம்; ஊர்; பூமி; குதிரை; தலைவன்; கணவன்; அரசன்; மூத்தோன்; குரு; கடவுள்.

பதிகன் - வழிப்போக்கன்

கலங்கிய - கலங்குதல் நீர்முதலியன குழம்புதல்; மனங்குழம்புதல்; தெளிவின்றாதல், மயங்குதல்; அஞ்சுதல்; துன்புறுதல்; தவறுதல்

மீன் - நீர்வாழ் உயிரி; விண்மீன்; சித்திரைநாள்; அத்தநாள்; மீனராசி; சுறா; நெய்தல்நிலப்பறை.

முழுப்பொருள்
விண்மீன்கள் (நட்ச்சத்திரங்கள்) எல்லாம் மனங்குழம்பி போய் உள்ளன. ஏனெனில் விண்மீன்களுக்கு நிலவே இந்த ப்ரபஞ்சத்தில் மிகுந்த அழகான ஒன்றாக இருந்தது. ஆனால் என் தலைவியின் பேரழகான முகத்தை பார்த்த உடன் நிலவு அழகா? இவள் முகம் அழகா? என்று குழம்பி போய் உள்ளன.

மனிதர்கள் ஆகிய நாம் நிலவை பற்றி அறிந்த ஒன்று இரவின் இருட்டில் வெளிச்சமாய் நிலவு அழகாய் தெரியும். அது மட்டும் இன்றி மாதத்தில் ஒரு சில நாட்களே (இரண்டு அல்லது மூன்று) முழுமதி இருக்கும். பொதுவாக 15 நாட்களுக்கு மட்டுமே தோன்றும்.

அது மட்டும் இன்றி இவளின் முகம் அடர்ந்த இருளில் ஒளியின் அழகு போல் அல்லாமல் வெளிச்சத்திலும் ப்ரகாசமாய் அழகாய் உள்ளது. அவளை சுற்றி உள்ள உலகின் வண்ணமயமான அழகு நிறைந்த இயற்கையின் (மரம், செடி, கொடி, பூக்கள், மலைகள், ஆறுகள்) மத்தியிலும் இவள் அழகாய் தோன்றுகிறாள்.


சில மணிநேங்கள் மட்டுமே பார்க்கும் நட்சத்திரமே இவளை கண்டு மயங்குகிறதே, இவளை அனேக நேரமும் பார்க்கும் நான் எவ்வளவு மயங்கி இருப்பேன். இந்த மயக்கத்தில் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் இவளை சுற்றி சுற்றி வருகின்றன.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது.) மீன் - வானத்து மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும் இதுமதி, இதுமுகம் என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன. (ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இரவுக் குறிக்கண் நிலாவைக் கண்டு சொல்லியது )
மீன் - விண்மீன்கள் ; மதியும் மடந்தை முகனும் அறியா - தம் தலைமைச் சுடராகிய மதிக்கும் எம் காதலி முகத்திற்கும் வேறுபாடு பெரிதாயிருந்தும் அதனை அறிய மாட்டாது ; பதியின் கலங்கிய - மயங்கித் தம் நிலையினின்றும் பெயர்ந்து அங்குமிங்குந் திரிகின்றன .

இரவுக்குறியாவது , பாங்கியிற் கூட்டக் காலத்தில் தலைமகனுந் தலைமகளும் இரவிற் கூடுதற்குக் குறித்த இடம் . ஒரிடத்து நிலைத்து நில்லாது எப்போதும் இயங்குதல்பற்றிப் ' பதியிற் கலங்கிய ' என்றான் . இதற்கு மதிமுக வேறுபாடறியாமைக் கரணியங் காட்டியது தற்குறிப் பேற்றம் . இக்குறட்கு "இனி இரண்டனையும் பதியிற்கலங்காத மீன்களறியு மல்லது கலங்கின மீன்களறியாவென்றுரைப்பினு மமையும் ". என்று பரிமேலழகர் கூறிய மற்றோருரை அத்துணைச் சிறந்ததன்று .

மணக்குடவர் உரை
மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் அறியாது தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள். மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இம் மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கு மென்று கூறியது.

மு.வரதராசனார் உரை
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

சாலமன் பாப்பையா உரை
அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!.

இன்பம் ஒருவற்கு இரத்தல்

குறள் 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
[பொருட்பால், குடியியல், இரவு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
ஒருவற்கு - ஒரு மனிதருக்கு
இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல்
இரந்தவை - இரந்து பெற்ற பொருள்;
துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.
உறாஅ  - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்
வரின் - வரும்

முழுப்பொருள்
இரப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல. ஒருவருக்கு மிகுந்த மனவருத்ததை கொடுக்க கூடியது. ஏனெனில் நாம் இரந்தால் அதற்கு பலர் கேள்வி கேட்பர். தேவையில்லாமல் பல விஷயங்களில் மூக்கை நுழைப்பர். ஏளனம் செய்வர். அது இல்லாமல் நமது குடிக்கும் நமக்கும் இழிவும் கூட. ஆனால் இரந்தால் நாம் இரந்தது மிக எளிதாக நமக்கும் பிறருக்கும் எந்த ஒரு மனவருத்ததையும் தராமல் வந்து சேர்ந்தால் அது சிறந்தது. அப்படி ஒரு இரத்தல் இன்பமே ஆகும். மேலோட்டத்தில் எளிமையாக பார்க்கபட்டாலும் அதில் நுட்பமான சில விஷயங்கள் உண்டு.

முதலாவதாக நாம் இரப்பது நேர்மையான (அறம் சார்ந்த) ஒரு காரணத்திற்காக இருந்தால் மட்டுமே நமக்கு எந்த ஒரு துன்பமும் இல்லாமல் வரும்.  ஆடம்பரமான இருப்பதற்கும் ஊர்சுற்றுவதற்கெல்லாம் கேட்டால் நம்மை கேள்வி கேட்பர்.

இரண்டாவதாக நம்முடைய பொருளாதாரம் தன்னை நாம் சரியாக பேணிகாக்காமல் அலட்சியமாக இருந்து விட்டு தீய வழிகளில் விரயம் செய்தால் நாம் இரக்கும் பொழுது நம்மை கண்டிப்பாக பலகேள்விகள் கேட்பார்கள். ஆதலால் நாமும் நேர்மையானவராக இருத்தல் வேண்டும்.

மூன்றாவதாக நாம் சென்று ஒருவரிடம் இரக்கும் பொழுது அவரால் அதனை கொடுக்க கூடிய பொருளாதாரத்தில் இருக்கிறாரா என்று அறிய வேண்டும். அவரால் கொடுக்க முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலையில் இருந்தால் நமக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று அவர் மன வருத்தம் படுவார். நமக்கு எப்படியாவது உதவி விட வேண்டும் என்று அவரும் இரந்து கொடுத்தாலும் கொடுப்பார். ஆதலால் நம்மால் மற்றவருக்கு துன்பம் வரக்கூடாது. 

மஹாபாரதத்தில் வரும் “கர்ணனை” இதற்கு உதாரணமாக சொல்லலாம். கர்ணனிடம்  இன்முகத்தோடு யாசகம் செய்பவன்.

மேலும் அஷோக்  உரை

ஒப்புமை
”வேளாண் வாயில் வேட்பக் கூறி” (பொருந் 75)
“தான் உபகரித்தற்கு வழியாகிய இரப்பினையே எப்பொழுது
விரும்பும்படி உபசாரங்களைக் கூறி (மேற்படி.ந)

பரிமேலழகர் உரை
ஒருவற் கிரத்தல் இன்பம் - ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்; இரந்தவை துன்பம் உறாஅவரின் - இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின். (இன்பம் - ஆகுபெயர். 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதியொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இரந்தவை துன்பம் உறாவரின்-இரந்த பொருள்கள் ஈவாரது பண்பாட்டினால் வாய் திறக்கு முன்பே விரைந்து மகிழ்ச்சியோடு கிடைக்குமாயின்; ஒருவற்கு இரத்தல் இன்பம்-ஒருவனுக்கு இரத்தலும் இன்பந்தருவதாம்.

துன்பம் காலமறிந்து செல்லுதல், காத்திருத்தல், ஈவார் மன நெகிழக் கெஞ்சுதல், அவர் முகந்திரிந்து நோக்குதலும் கடுஞ்சொற் சொல்லுதலும் மறுத்தலும் முதலியவற்றால் வருவது. ’இன்பம்’ ஆகுபொருளது. ’உறா’ ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். ’உறாஅ’ இசைநிறை யளபெடை. "இரந்தவர் துன்பமுறா வரி" னென்று பாடமோதி, இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றாற் றுன்புறாது எதிர்வந்தீவராயி னென்றுரைப்பாரு முளர் என்று பரிமேலழகர் கூறுவர். இதற்கு

"என்று முகம னியம்பா தவர்கண்ணுஞ்
சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்."


என்னும் நன்னெறியடிகள் மேற்கோளாம். இரத்தலும் என்னும் இழிவு சிறப்பும்மை தொக்கது.

மணக்குடவர் உரை
இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம், இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின். இது வேண்டிய பொருள் பெறின் துன்பமாகா தென்றது.

மு.வரதராசனார் உரை
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

English Meaning - As I taught a kid - Rajesh
If a person whom we request/beg financial assistance helps us happily and doesn't make us sad or regret, then, begging is also a happy thing.

For any person, pleading or begging or requesting for financial assistance, food or any other basic amenities is not an easy thing. Because one has to go through many internal emotions, one has to go beyond their self esteem, one might have to go through questions from other persons (sometimes it can be interrogative, free advices etc) , one might face judgement, one might face sympathy, one might face humiliations etc. Hence, a person begs with an heavy burden in their heart. 

Hence, if a person is able to understand the pleader (pleader's emotions and needs) and is helping then the pleader will be happy at pleading.

However, pleader must ask for genuine reasons, should be able to gauge the other persons financial situation too, and the pleader should not be idle.  Because 1) if pleader doesn't ask for genuine reasons then he/she might face humiliations/free advices 2) if the other person is not in good financial state then it might not give happily as he/she himself have to borrow money 3) if the pleader is idle then he/she is most likely face humiliations or get free advice. 

Questions that I ask to the kid
When is begging a happy thing?

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி

குறள் 995
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு..
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நகையுள்ளும் நகை -  சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.

இன்னாது - தீது; துன்பு

இகழ்ச்சி - அவமதிப்பு; குற்றம் விழிப்பின்மை; வெறுப்பு

பகையுள்ளும் - பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை.

உள - உள்ள, உள்ளல், உள்கல், உள்குதல், நினை, எண்ணு, மதி

பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு.

அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல்
அறிவார்  - அறிந்தார் - கற்றவர்கள்

மாட்டு- அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற்கொண்டு கூட்டிய சொல் முடிவு கொள்ளும் முறை; அடி; சொல்.

முழுப்பொருள்
பகைவராக இருந்தாலும் கூட ஒருவரை விளையாட்டிற்காக கூட அல்லது ஒரு சில நிமிடங்களுக்கான சிரிப்பிற்காக கேளிகை செய்ய கூடாது. ஏனெனில் விளையாட்டானாலும் சிறு நேரத்திற்கு ஆயினும் அவமதிப்பும் இகழ்ச்சியும் பிறருடைய மனதை புன்படுத்தும். ஆதலால் பண்புள்ளவர் பகைவரைக்கூட இகழமாட்டார். அப்படி என்றால் யாரையும் நாம் விளையாட்டிற்கு கூட இகழ கூடாது.

ஒப்புமை
”நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்” (பதிற்று. 70:12)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது - தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆகலான், பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன. ('பாடறிவார்' எனவே , அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம் இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரு மாயினார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நகையுள்ளும் இகழ்ச்சி இன்னாது -விளையாட்டாகவேனும் ஒருவரைப் பற்றிப் பழித்தல் அவருக்குத் துன்பந்தருவதாம்; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆதலாற் பாடறிந்தொழுகுவாரிடத்திற் பகைமையுள்ள போதும் இனிய பண்புகளே உண்டாவன.

பாடறிந்தொழுகுவார் பிறருக்குத் துன்பந்தருவதை விலக்குவராதலின், பகைவருக்கும் நன்மையே செய்வார் என்பது கருத்து. உம்மைகள் இழிவு சிறப்பு.

மணக்குடவர் உரை
தன்னை யிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது: ஆகலாற் பிறர் பாடறிந் தொழுகுவார்மாட்டுப் பகைமையுள் வழியும் அஃதுளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன.

மு.வரதராசனார் உரை
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை
விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.

English Meaning - As I taught a kid - Rajesh
Even playfully one should not hurt others by means of a joke or deliberate shrewd mincing of words as it can mentally affect them. Hence, a person who knows how to handle others and a situation will not even playfully hurt even the enemies. Mental hurt can adversely affect the person for e.g., 1) stalling his or her performance and work 2) triggering revenge etc. 

This kural doesn't mean one should criticize others. When it comes to work or personal development, criticization is essential for progress. However, 1) the discussion is about improvement(criticization) has to be debriefed upfront, 2) confirmation has to be received that the other person is listening to the feedback given, 3) the criticization has to be constructive not downgrading the confidence.

Questions that I ask to the kid
Is it fine to playfully hurt others? Why?
Can I criticize others playfully or playfully give a feedback to others? Why?

தொகச்சொல்லித் தூவாத நீக்கி

குறள் 685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
[பொருட்பால், அமைச்சியல், தூது]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தொகுப்பு - தொகை; கூட்டம்; எல்லை
தொகை - கூட்டம்; சேர்க்கை; தொகுத்துக் கூறுகை (சுருக்குதல்) ;  கொத்து; மொ)த்தம்; பணம்; எண்; கணக்கு; தொக்குநிற்றல்; திரட்டுநூல்; விலங்குமுதலியவற்றின்திரள்; கூட்டல்; வேற்றுமைத்தொகைமுதலியதொடர்சொற்கள்

சொல்லி - அவைக்கு கூறுதல்
தூவாத -  வேண்டாதவை
நீக்கி - நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

நகச் - நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.

சொல்லி - அவைக்கு கூறுதல்

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
பயப்பது - விளைதல், உண்டாதல், படைத்தல், பெறுதல்
ஆம் -
தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர் தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.

முழுப்பொருள்
தூது எனப்படுவர் இருவரிடையே பேச்சு நிகழ்வதற்கு உதவியாக நிற்கும் ஒரு நபர். இத்தகையவர் இரு அரசர்களுக்கு நடுவில் இருப்பர். இன்றைய காலத்தில் இரு வணிக தலைவர்களுக்கு நடுவில் இருப்பர். இரு குடும்பங்களுக்கு நடுவில் இருப்பர். இப்படி தூது செய்வோரின் தூது ஆற்றல் என்று சில உண்டு. அதில் ஒன்று சொல்ல வேண்டிய கருத்துக்களை திரட்டி அதனை பற்றிய முழு புரிதலுடன் தெளிவாக தொகுத்து முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, தேவையில்லாதவற்றை விடுவித்து சொற்களை விரயம் செய்யாமல் சொல்லவேண்டும். இதனை நட்புடனும் பரிவுடனும் நயத்தக்க சொற்களில் (ஏனெனில் தகாத சொற்களால் இருவரிடையே ஆன உறவிற்கு பங்கம் வரக்கூடாது) உறவிற்கு நன்மை உண்டாக்கும் கருத்துக்களை(சொற்களை) சொல்பவரே தூது.

மேலும் அஷோக்  உரை
அனுமனைச் சொல்லின் சொல்வன் என்று சொல்லி, அவன் சுருங்கப் பேசும் திறனுக்கு, “கண்டேன் சீதையை” என்று அவன் தூது முடிந்து வந்து இராமனைக் கண்டுச் சொல்வதையே எல்லோரும் கூறூகிறார்கள். இது அவன் தூதின் பெருமையைக் காட்டுவதல்ல. அவன் தூது சொன்னதை கம்ப இராமாயணம் பதினேழு பாடல்களில் கூறுகிறது.

கம்பராமாயணம் பிணி வீட்டுப்படலத்தில் தூது செல்லும் அனுமன், இராவணனை வென்ற வாலியின் பெருமை, அவன் இராமனால் கொல்லப்பட்டது என்று பலவும் சொல்லி, அவன் செய்த தீச்செயலால் எப்படி அவன் அழிய நேரும் என்று விளக்கி, சீதையை ஏன் அவன் இராமனிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி முடிக்கிறான். 

இதில் சுருக்கமாகச் சொல்வதைவிட எவற்றைச் சொல்லவேண்டுமோ, எவ்வாறு சொல்லவேண்டுமோ, இராவணன் அவன் செய்யவேண்டிய முடிவுக்கு என்னவெல்லாம் கேட்கவேண்டுமோ அவற்றையெல்லாம் சொல்லுகிறான். மகாபாரதக்கண்ணனின் தூதும் இதைப்போன்றதே. சுருங்கச் சொல்வதே, தொகுத்து முறைபடச் சொல்வதே தேவையாகும்.

எல்லோரும் மகிழச் சொல்வது என்பது விரும்பத்தக்கதே ஆயினும், அது எப்போதும் நடக்கக் கூடியதல்ல. இதிகாசக் காட்சிகளாயினும், பாரிக்காய் ஔவையார் தூது சென்ற சரித்திர காட்சிகளாயினும் இது நடந்ததில்லை; இன்றும் நடப்பதில்லை. 

ஒப்புமை
”வயலைக் கொடியின்.............
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் அணிகளைந் தனவே” (புறநா.305)

பரிமேலழகர் உரை
தொகச் சொல்லி - வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச் சொல்லி - இன்னாத காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதுஆம் - தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான். (பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர், இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, அவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தொகச் சொல்லி-வேற்றரசரிடம் பல செய்திகளைச் சொல்லவேண்டியிருக்கும்; போது மூலவகையாலும் ஒப்புமை வகையாலும் சுருக்கவகையாலும் தொகுத்துச் சொல்லியும் தூவாத நீக்கி நகச்சொல்லி-வெறுப்பான செய்திகளைச் சொல்லும்போது கடுஞ் சொற்களை நீக்கி இனிய சொற்களால் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூது ஆம்-தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே நல்ல தூதனாவன்.

பல செய்திகளை ஒவ்வொன்றாக வேறுபடச்சொல்லின், அவற்றின் பன்மைபற்றியும் நெடுநேரங் கேட்குஞ் சலிப்புப் பற்றியும் அவற்றிற்கு இசையார். ஆயின், அவற்றைத்தொகுத்து ஒரே செய்தியாய்ச்சொல்லின் சுருக்கம்பற்றியும் விளைவறியாதும் இசைவர் என்பதாம். வேற்றரசன் மகளைத் தன்னரசனுக்குப் பெண்கேட்பதும், வேற்று நாட்டில் தன்னாட்டு வணிகக்குழும்பு ஒன்று தங்கி வணிகஞ் செய்ய இடங்கேட்பதும், போன்றவை மூலவகையில் தொகுத்துக் கூறலுக்கும்; சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் வெட்டுதல், சுருங்கைகள் குடைதல் முதலியவற்றைப் போக்குவரத்து வாயிலமைப்பு என்று குறிப்பது, ஒப்புமை வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; கோமுட்டி ஒருவன் தனக்குத் தெய்வங்கொடுத்த ஒரே ஈவைக் கேட்கும் போது, "என் கொட்பேரன் எழுநிலை மாடத்திலிருந்து பொற் கலத்திற் பாற்சோறுண்பதை நான் பார்க்க வேண்டும்." என்று சொன்னதாகக் கதை கூறுவது போன்றது. சுருக்க வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; எடுத்துக்காட்டாம். இன்சொற்குப் பெரும்பாலார் வயப்படுதல் பற்றியே அது நால்வகை ஆம்புடைகளுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. 'ஆம்' பிரித்துக் கூட்டப்பட்டது.

மணக்குடவர் உரை
சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லித் தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான். இது சொல்லுமாறு கூறிற்று.

மு.வரதராசனார் உரை
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

சாலமன் பாப்பையா உரை
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
An emissary is an intermediate person playing a crucial role in helping to communicate message and negotiate. In olden days emissary played role in kingdoms; Today, between governments, between organizations, between groups, between people etc.

An emissary should have following capabilities 
1) Being coherent in communicating the message. This comes by understanding the message comprehensively and in depth, creating a structure and exhibiting purpose
2) Avoiding objectionable words. Not giving much information or unnecessary information. Because the purpose is to improve relations, improve the situation, bring positive outcomes, establish win-win situations. Not to deteriorate the situation further nor take it to irreconcilable state nor take it to too difficult to reach to take any step further
3) Evoke smiles - Main purpose is to improve relationships. So, being friendly in terms of words, conduct, body language, facial reactions is very important.

Only the emissary who follows the above three ways would be able to get desired results. 

Questions that I ask to the kid
What are the 3 ways through which an emissary get desired results?